

கோவை தெற்கு தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவர் நேற்று கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவர் நேற்று காலை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடைப் பயிற்சி மேற்கொண்டதுடன், அங்கு வந்த பொதுமக்கள், வர்த்தகஅமைப்பினரிடம் துண்டுப்பிரசுரம் விநியோகித்து, ஆதரவு திரட்டினார்.
தொடர்ந்து, உப்புக்கார சந்து பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். வியாபாரிகள், பொதுமக்கள் நிறைந்த அப்பகுதியில் வீடுகள் மற்றும் கடைகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது மயூரா எஸ்.ஜெயக்குமார் பேசும்போது, ‘‘நடுத்தர வியாபாரிகள் அதிக அளவில் நிறைந்த இப்பகுதியில், வியாபாரிகள் தொழிலை பாதுகாப்பாக நடத்தவும், தொழில் வளத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.
சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், இப்பகுதி முழுவதும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை அமைத்துத் தருவேன்’’ என்றார்.