

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், ராஜ்குமார் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்றுமாலை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: ஊழலுக்கு எதிராக நீங்கள் தேர்வு செய்வது, இன்னொரு ஊழலாக இருக்கக்கூடாது. மீண்டும் ஊழல்வாதிகளை தேர்வு செய்ய வேண்டாம். நேர்மை என்ற வார்த்தையை மட்டும் நாங்கள் மூலதனமாக வைத்து பேசுவதால், அதை தகர்க்க வருமான வரிச் சோதனை நடத்துவர். என்னிடம் அது நடக்காது. என் வட்டத்தில் அதுபோல தவறு செய்தவர்கள் இருந்தால் அவர்களை நான் கண்டிப்பேன்.
தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் என்ன செய்ய போகிறோம் என பேசுவதற்கு கூட துண்டுச்சீட்டை வைத்துகொண்டு படிக்கிறார்கள். பொய் சொல்ல நிறைய ஞாபக சக்தி தேவை என்பதால், எங்கே மறதியாக எதையாவது பேசி விடுவோமோ என்ற அச்சம் காரணமாகவே துண்டுச்சீட்டு தேவைப்படுகிறது. மனித - வன விலங்குகள் மோதல்கள்அதிகரித்தபடி உள்ளன. 500-க்கும்மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. இவர்கள் மனிதர்களுக்கும் எதுவும் செய்யவில்லை, வன விலங்குகளுக்கும் எதுவும் செய்யவில்லை. ஏனென்றால் கமிஷன் கிடைக்காத எதையும், இவர்கள் செய்வதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.