Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா இன்று தொடக்கம்: மயிலாப்பூரில் மார்ச் 28 வரை போக்குவரத்து மாற்றம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் 25-ம் தேதி, அறுபத்து மூவர் விழா 26-ம் தேதி, திருக்கல்யாண உற்சவம் 28-ம் தேதி நடக்க உள்ளன. இதையொட்டி, மக்களின் பாதுகாப்பு, வசதியை கருத்தில் கொண்டு மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்தில் உரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் 28-ம் தேதி வரை கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு, சித்ரகுளம் கீழ் தெருவில் இருந்து சித்ரகுளம் வடக்கு தெரு, நடுத்தெரு, சுந்தரேஸ்வர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு, புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாட வீதி நோக்கி, டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை, லஸ் சந்திப்பில் இருந்து ஆர்.கே.மடம் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

மாற்று ஏற்பாடு

ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கச்சேரி சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ், லஸ் சர்ச் சாலை, டிசில்வா சாலை, பக்தவச்சலம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, சி.பி.ராமசாமி சாலை, ராஜா அண்ணாமலைபுரம் 2-வது பிரதான சாலை, தேவநாதன் தெரு, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளியை அடையலாம்.

அடையாறில் இருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, மந்தைவெளி, வி.கே.அய்யர் சாலை, சிருங்கேரி மடம் சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், விவேகானந்தா கல்லூரி, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ்ஸை அடையலாம்.

மயிலாப்பூர் கோயில் குளம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம், லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.

21-ம் தேதி அதிகாரநந்தி திருவிழா அன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரையும், 25-ம் தேதி தேர் திருவிழா அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரையும், 26-ம் தேதி அறுபத்துமூவர் விழா அன்று பகல் 1.30 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரையும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும்.

வாகன நிறுத்த தடை

25, 26-ம் தேதிகளில் சந்நிதி தெரு, கிழக்கு மாட வீதியில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை. அந்த நாட்களில் கீழ்க்கண்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்குப் புறத்தில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்களை லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் அருகே நிறுத்தலாம். மேற்குப் புறத்தில் இருந்து வரும் வாகனங்களை சாய்பாபா கோயில் அருகே வெங்கடேச அக்ரஹாரம், திருமயிலை பறக்கும் ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்தலாம். காவல் துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் பி.எஸ்.சிவசாமி கலாலயா பள்ளி, ஆர்.ஆர்.சபா அருகே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x