

50 ஆண்டுகளாக நீங்கள் செய்த பாவத்துக்கு எங்களுக்கு வாக்களித்துப் பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள், என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் துரைமாணிக்கம் (காரைக்குடி), கோட்டைகுமார் (திருப்பத்தூர்) ஆகியோரை ஆதரித்து தேவகோட்டையில் சீமான் பேசியதாவது:
நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு மீனவரைக்கூட கொல்லவில்லை, என பாஜகவினர் கூறுகின்றனர். சமீபத்தில்கூட 4 மீனவர்களை இலங்கைக்காரர்கள் கொன்றார்கள். அதைக் கண்டித்து பிரதமரோ, ஹெச்.ராஜாவோ ஒரு வார்த்தைகூட பேசியது கிடை யாது. ஏன் காங்கிரஸ் தலைவர் கூட கண்டிக்கவில்லை. ஆனால், நமது வீட்டு வாசலில் வாக்குக்காக நிற்கின்றனர்.
காவிரி நதி நீர் உரிமை, முல்லை பெரியாறு பிரச்சினைகளில் காங்கிரஸ், பாஜக நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் கேட்க வேண்டும். இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் பிரச்சினை என்றால் முதல் மகனாக ஓடி வந்து நிற்பேன். நாட்டில் கட்சிகளே இருக்கக் கூடாது. அதேபோல் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழித்தால்தான் மத்தியில் கூட்டாட்சி, தமிழகத்தில் தமிழன் ஆட்சி மலரும். அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்ததால் வளரும் நாடுகள் பட்டியலில் இருந்தே இந்தியாவை தூக்கி விட்டனர்.
நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ்தான். நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தால்தான் தகுதி என்றால், ஏற்கெனவே நாடு சுதந் திரம் அடைந்ததில் இருந்து மருத்துவர்கள் ஆனவர்கள் தகுதியற்றவர்களா? அவர்களை தகுதி நீக்கம் செய்துவிடுவார்களா?
ஊழலில் தலைசிறந்த நாடுகளில் ஒன்று நைஜீரியா, மற்றொன்று இந்தியா. கச்சத்தீவை எடுத்துக் கொடுக்கும்போது ஒன்றும் செய்யாமல் இப்போது மீட்போம் என்கின்றனர். ஆனால், கச்சத்தீவை கொடுத்தது கொடுத்ததுதான் என காங்கிரஸ், பாஜக கூறுகின்றன. இதன்மூலம் இரு கட்சிகளும் வேறு, வேறாக இருந்தாலும் கொள்கை ஒன்று தான்.
கச்சத்தீவு இந்தியாவின் சொத்து அல்ல, தமிழரின் சொத்து. ஊழல், லஞ்சம் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு வாக்களிப் பவர்களும் சாபத்துக்கு உள்ளாக நேரிடும். 50 ஆண்டுகளாக நீங்கள் செய்த பாவத்துக்கு எங்களுக்கு வாக்களித்துப் பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள், என்று கூறினார்.