

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை அன்றே இரு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை இனி படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறும்போது, "தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆந்திராவுக்கு நகர்வதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னை, வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், அடுத்த தகவல் வரும் வரையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்றார் ரமணன்.