Published : 19 Mar 2021 03:16 AM
Last Updated : 19 Mar 2021 03:16 AM

திருவண்ணாமலையில் யானை ருக்கு உயிரிழந்து 3 ஆண்டுகளாகியும் அண்ணாமலையார் கோயிலுக்கு புதிய யானை வாங்கவில்லை: தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

தி.மலை அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு உயிரிழந்து 3 ஆண்டுகளாகியும், புதிய யானை வாங்கவில்லை என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கம்பீரமாக வலம் வந்தது பெண் யானை ருக்கு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 1995-ம் ஆண்டு யானை ருக்குவை வழங்கினார்.தனது 7 வயதில், அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த ருக்கு, 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக சேவை செய்துள்ளது. தமிழக அரசு நடத்தும் புத்துணர்வு முகாமுக்கு சென்றுவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன், கோயிலுக்கு யானை ருக்கு திரும்பும்.

கார்த்திகை தீபத் திருவிழா உட்பட அனைத்து விழாக்களிலும் யானை ருக்கு, முக்கிய பங்காற்றியது. யானை ருக்கு வணங்கிய பிறகுதான், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு, மகா தீபம்ஏற்றப்படும் கொப்பரை கொண்டு செல்வது வழக்கம். சுவாமி வீதியுலா மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் உற்சவர்களை வழி நடத்தி சென்றது ருக்கு. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி அன்பாக பழகியது.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம், கோயிலில் இருந்த யானை ருக்குவின் அருகே நாய்கள் ஓடின. இதனால் மிரண்டு போன யானை ருக்கு, பதற்றமடைந்து ஓடியதாகவும், அப்போது அங்கிருந்த இரும்பு தடுப்பு கம்பியில் மோதி பரிதாபமாக உயிரிழந்ததாக கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து பக்தர்களின் அஞ்சலிக்கு பிறகு, அம்மணி அம்மன் கோபுரம் அருகே உள்ள வடக்கு திசையில் உள்ள மதிற்சுவர் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, அண்ணாமலை யார் கோயிலுக்கு புதிதாக யானை வாங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கை, 3 ஆண்டுகளாகியும் நிறைவேறவில்லை.

இது குறித்து பக்தர்கள் கூறும்போது, “உலக புகழ்மிக்க அண்ணாமலையார் கோயிலில் 23 ஆண்டுகளாக கம்பீரமாக வலம் வந்த யானை ருக்கு, கடந்த 2018 மார்ச் மாதம் 21-ம் தேதி உயிரிழந்தது. தற்போது, 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. புதிய யானை வாங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தி.மலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக சேவூர் எஸ்.ராமச் சந்திரன் இருந்தும், கோரிக்கை நிறைவேறவில்லை.

இதற்கிடையில், திருவண்ணா மலை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்தாண்டு நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, அண்ணாமலையார் கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முதல்வரே உறுதி அளித்ததால், நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம். அவரது அறிவிப்பானது, 7 மாதங்களை கடந்தும், கோயிலுக்கு யானை வந்து சேரவில்லை. எனவே,அண்ணாமலையார் கோயிலுக்கு புதிய யானை வாங்க தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.

இது குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் விசாரித்தபோது, ‘யானை வாங்குவதற்கான நடவடிக்கை தொடர்கிறது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x