

இந்த சட்டப்ரேவைத் தேர்தலில் ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் எடுபடாது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பரிதாவுக்கு ஆதரவாக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘கடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் நமது உழைப்பையும்வியர்வையையும் கூட்டணிக் கட்சியினரின் உழைப்பால் வெற்றி பெற்று துரோகம் செய்துவிட்டுமாற்று அணிக்கு சென்றுவிட்டனர். அவர்கள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள். பொன்னும் பொருளுமே அவர்கள் கண்ணுக்கு தெரிந்தது.
‘பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து கண்மூடி போகிறவர்கள் போகட்டுமே. நன்றி, மறவாத நல்ல மனம் போதும் அதுவே என் மூலதனம் ஆகும்’ என்ற எம்ஜிஆரின் பாடலுடன் பேச்சை தொடர்ந்தவர், தற்போது அறிவித்துள்ள வேட்பாளர், தலைமையால் நன்கு ஆராய்ந்து கழகத்துக்கும் தொகுதிக்கும் உறுதுணையாக இருப்பார் என்று உறுதியான பிறகே அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நாடளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்தார். அது மக்களிடத்தில் எடுபட்டுவிட்டது. பொய் பிரச்சாரம் என்பதுஅவர்களுக்கு கைவந்த கலை. இரண்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என்று கூறினார்கள். ஆனால், கையளவு நிலத்தை கூட தரவில்லை. பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தற்போது ஸ்டாலினின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் தேர்தலில் எடுபடாது. மக்கள் ஆதரவுடன் அதிமுக அமோகமாக வெற்றி பெறும்’’ என்றார்.