வாணியம்பாடி அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஜெயபிரீத்தியின் உறவினர்கள்.
வாணியம்பாடி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஜெயபிரீத்தியின் உறவினர்கள்.
Updated on
2 min read

காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து, வாணியம்பாடி - ஆம்பூர் சாலையில் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கல்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரீத்தி (22). இவர், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்த அன்பு (27) என்பவரை காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு மிட்டூர் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை- சச்சரவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஜெயபிரீத்தி திடீரென உயிரிழந்து விட்டதாக அவரது கணவர் அன்பு, ஜெயபிரீத்தி வீட்டாருக்கு தகவல் கொடுத்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மிட்டூர் பகுதிக்கு விரைந்து வந்தனர். அதற்குள்ளாக அங்கு வந்த குரிசிலாப்பட்டு காவல் துறையினர் ஜெயபிரீத்தி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பிரேதப் பரிசோதனை முடிந்து அதன் அறிக்கை வந்த பிறகே ஜெயபிரீத்தி எப்படி உயிரிழந்தார்? என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால், ஜெயபிரீத்தி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

இந்நிலையில், ஜெயபிரீத்தி உடல் பிரேதப் பரிசோதனை செய்து நேற்று மாலை வரை வழங்காத திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை கண்டித்தும், மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அன்புவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி ஜெயபிரீத்தியின் உறவினர்கள் வாணியம்பாடி - ஆம்பூர் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்ததும் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்செல்வம் தலைமையிலான காவல் துறையினர் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, பிரேதப்பரிசோதனை முடிந்துவிட்டதாக வும், ஜெயபிரீத்தி உடல் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அன்புவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் உண்மை தெரியவரும் எனக்கூறி சமாதானம் செய்தனர். இதனையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அங்கு சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in