Last Updated : 18 Mar, 2021 08:33 PM

 

Published : 18 Mar 2021 08:33 PM
Last Updated : 18 Mar 2021 08:33 PM

மத்திய அமைச்சருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த மதுரை பாஜக வேட்பாளர்

மதுரை

மதுரை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் பா.சரவணன் மத்திய அமைச்சருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை வடக்குத் தொகுதியில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராக சமீபத்தில் கட்சியில் இணைந்த திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் பா.சரவணன் போட்டியிடுகிறார்.

இவர் மதுரை வடக்குத் தொகுதி தேர்தல் அலுவலர் பிரேம்குமாரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக டாக்டர் சரவணன் கோ.புதூரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து தமிழக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளரும், மத்திய இணை அமைச்சருமான வி.கே.சிங், பாஜக அரசு தொடர்பு பிரிவு செயலர் ராஜரத்தினம், மாநகர் மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன், துணைத் தலைவர் ஹரிகரன் மற்றும் பாஜக, அதிமுக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக மதுரை வடக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு வந்தார்.

மத்திய அமைச்சர் வி.கே.சிங், அதிமுக பகுதி செயலர் ஜெயவேல் ஆகியோருடன் சென்று சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் மாநிலத் தலைமை வழங்கும் கட்சி வேட்பாளருக்கான அங்கீகார கடிதத்தையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், சரவணன் மாநிலத் தலைவரின் அங்கீகார கடிதம் கொண்டு வரவில்லை. அதற்கு பதில், மாவட்டத் தலைவரின் அங்கீகாரக் கடிதத்தை வழங்கினார்.

அதை ஏற்க மறுத்த தேர்தல் அலுவலர் மாநிலத் தலைவரின் அங்கீகார கடிதத்தை நாளை சமர்பிக்க வேண்டும் எனக் கூறினார். மாற்று வேட்பாளராக டாக்டர் சரவணன் மனைவி கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்.

சரவணன் தன் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் ரூ.8 கோடியே 93,95,962 மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், ரூ.6.92 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாகவும், தன்னிடம் 80 கிராம் தங்க நகைகள், மனைவி பெயரில் 2440 கிராம் தங்க நகைகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

பின்னர், வேட்பாளர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரவுடிகள் கலாச்சாரத்தை ஆதரிக்கும் திமுகவை மக்கள் விரும்பவில்லை. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் 3-வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார். தொடர்ந்து புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சரவணன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x