

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ். கரோனா ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதையடுத்து தந்தை, மகன் இருவரையும் கொலை செய்ததாக சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என 9 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. சிபிஐ போலீஸார் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கடந்த வாரம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் ஜெயராஜ் மனைவி செல்வராணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
என் கணவர், மகன் கொலை வழக்கை முதலில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன் பிறகு வழக்கு 8-க்கும் அதிகமான முறை விசாரணைக்கு வந்துள்ளது.
டிச. 10-ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், செல்போனில் யாரிடமோ பேசி ரூ. 36 லட்சம் கேட்டு மிரட்டினார். அன்று குற்றம்சாட்டப்பட்ட போலீஸார் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை மிரட்டினர். மோசமான வார்த்தைகளால் திட்டினர். பணபலம், ஆள்பலத்தால் சாட்சிகளை போலீஸார் கலைப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே, மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி முரளி சங்கர் விசாரித்து, மதுரை மாவட்ட நீதிம் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.