Published : 18 Mar 2021 06:56 PM
Last Updated : 18 Mar 2021 06:56 PM

ட்ரோல் செய்பவர்களுக்கு நன்றி; இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான்: மதுவந்தி சிறப்புப் பேட்டி

மதுவந்தி- பிரபல நடிகரின் மகள் என்பதைத் தாண்டி அவர் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது கடந்த ஆண்டில். பிரதமர் மோடியைப் பாராட்டி கரோனா காலத்தில் வெளியிட்ட காணொலிகளால் சமூக வலைதளங்களில் பேசப்பட்டார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும், ஆயிரம் விளக்கு தொகுதியில் சக்தி கேந்திரா பொறுப்பாளராகவும் இருக்கும் அவரிடம் அரசியல் சூழல் முதல் சமூகவலைதளத் தாக்குதல் வரை 'இந்து தமிழ்' இணையதளத்துக்காகப் பேசினோம்.

தமிழகக் கள நிலவரம் அதிமுக கூட்டணிக்குத்தான் சாதகமாக உள்ளது என்கிறீர்கள். ஆனால் கருத்துக் கணிப்புகள் வேறு மாதிரி இருக்கின்றனவே?

கருத்துக் கணிப்பை யார் வேண்டுமானாலும் காசு கொடுத்து, எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. எத்தனை கருத்துக் கணிப்புகள் வந்தாலும் கடைசியில், களத்தில் மக்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நான் நிறையப் பயணிக்கிறேன். மக்கள் அனைவரும் 'எடப்பாடியார் சரியாகத்தான் எல்லாவற்றையும் செய்கிறார். இவரே நீடிக்கட்டுமே' என்கிற ஆணித்தரமான கருத்தை முன்வைப்பதைப் பார்க்கிறேன். உடன் பாஜக கூட்டணி இருப்பதும் கூடுதல் பலம்.

கரோனா காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளால் மக்கள் திருப்தி அடைந்திருக்கிறார்கள். அரசு கொடுத்திருக்கும் சலுகைகள், திட்டங்களால் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. எனவே, அதிமுக- பாஜக கூட்டணி மக்களுக்கு நல்லது செய்யும் கூட்டணி, இந்தக் கூட்டணியே தொடரட்டும் என்று கூறுகின்றனர்.

தொடர்ந்து பத்தாண்டுகளாக ஒரே கட்சி தமிழகத்தை ஆண்டு வருகிறதே. இதனால் இயல்பாகவே மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு, அது தேர்தலில் எதிரொலிக்காதா?

அதிருப்தி என்பதே இல்லை. மக்கள் திருப்தியாகத்தான் இருக்கிறார்கள். ஓர் அரசு தனது வேலையைச் சரியாகச் செல்லவில்லை என்றால்தான் அதிருப்தி வரும். ஆனால், இங்கு திருப்திதான் இருக்கிறது. 'இவர்களே பரவாயில்லை; சரியாக இருக்கிறார்கள்' என்ற எண்ணத்தில்தான் இருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களை நாம் எளிதில் எடைபோட்டுவிட முடியாது. மக்கள் யோசிக்கிறார்கள். ஆழமான அறிவும் தனித்துவமும் கொண்டவர்கள் இவர்கள். எல்லா மாநிலங்களையும் வைத்து நாம் தமிழகத்தை எடை போட்டுவிட முடியாது.

வழக்கமாக பாஜகவுக்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு இருக்காது. இந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறீர்களே, வெற்றி பெற வாய்ப்புள்ளதா?

தாராபுரம் தொகுதியில் எங்களின் மாநிலத் தலைவர் முருகன் வேட்புமனுத் தாக்கல் செய்யப் போகும்போது கூடிய கூட்டம், யாருமே எதிர்பார்க்காதது. பணம் கொடுக்காமல் 'தானா சேர்ந்த கூட்டம்'. பாஜக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யப் போகும்போது, எங்கு பார்த்தாலும் கூட்டம் அலையெனத் திரள்கிறது.

'எங்கே பாஜக?' என்று கேட்ட காலம் போய் 'எங்கும் பாஜக' என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப் பகுதிகள் உட்பட எங்கே சென்றாலும் எங்களின் கொடியைப் பார்க்க முடிகிறது. 'அங்கே அவர்கள் ஆதிக்கம்', 'இங்கே இவர்கள் ஆதிக்கம்' என்று சொன்ன காலம்போய் எல்லா இடங்களிலும் எங்களின் கொடி பறக்கிறது. பாஜகவினருக்கு வரவேற்பு கிடைக்கிறது. 'கோ பேக் மோடி' என்ற காலம் போய், 'வாங்க மோடி; வணக்கங்க மோடி' என்ற நிலைக்குத் தமிழகம் வந்துவிட்டது.

எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டதாக நினைக்கிறீர்கள்?

நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லவை நடந்திருக்கின்றன. மாநிலங்களில் நமது கட்சி ஆட்சியில் அல்லது கூட்டணியில் இருக்கிறதோ, இல்லையோ, பிரதமர் மோடி ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் திட்டங்களை நேரடியாகக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார். உஜ்வாலா, முத்ரா, விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டங்கள் அனைத்துமே தரகர் என்ற இடையூறு இல்லாமல், நேரடியாகக் கிடைக்கின்றன. மக்கள் தங்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பார்க்கிறார்கள். ரேஷன், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டங்கள் எங்களின் சாதனைகளைச் சொல்கின்றன. தமிழ்நாட்டில் பாஜக சார்பில் ஒற்றை கவுன்சிலர் கூட இல்லாத நிலையிலும் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு நிதித் திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

20 தொகுதிளில் எத்தனை இடங்களில் வெல்வீர்கள்?

ஜார்ஜ் கோட்டைக்குள் 20 பாஜக எம்எல்ஏக்களும் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம், பிரார்த்தனை. இது நடந்துவிட்டால் பெரிய விஷயம்.

தேர்தலில் போட்டியிடும் விருப்பம் உள்ளதா, இந்த முறை சீட் கேட்டீர்களா?

கட்சியில் இருக்கும் எந்த ஒரு நபருக்கும் சீட் கேட்கும் உரிமை உள்ளது. அந்த உரிமை எங்கள் கட்சியில் ஆண், பெண் இருவருக்கும் சமமாகவே அளிக்கப்பட்டிருக்கிறது. நான் சீட் கேட்டிருந்தேன். இந்த முறை கிடைக்கவில்லை. இப்போதைய சூழலில் யாருக்கு இடம் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் தலைமைக்கு மட்டுமே உண்டு. அவர்கள் சிறப்பான 20 பேரைத் தேர்ந்தெடுத்து அறிவித்திருக்கிறார்கள். இந்த 20 பேரையும் வெற்றி பெற வைப்பதுதான் எங்களின் பணி.

எந்தத் தொகுதியைக் கேட்டீர்கள்? ஏன் சீட் கிடைக்கவில்லை?

துரதிர்ஷ்டவசமாக நான் கேட்ட தொகுதி பாஜக பட்டியலில் வரவில்லை. அதனால் அதுபற்றி என்னால் பேச முடியாது. அரசியலில் நான் சிறியவள். 8 ஆண்டுகளாகத்தான் கட்சியில் இருக்கிறேன். நாட்டை இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாஜகதான் ஆளப் போகிறது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்ல இருக்கிறேன். அடுத்தவர்களை இழிவாகப் பேசி, குற்றம் கண்டுபிடிப்பது அரசியல் அல்ல. நாங்கள் செய்திருக்கும் நலத்திட்டங்களை எடுத்துச் சொன்னாலே போதும் என்று நினைக்கிறேன். ஒரு கலைஞருக்கு இயல்பாகவே இருக்கும் திறன், பேச்சாளுமைதான். அதைச் சரியாக உபயோகித்து மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லத் திட்டமிட்டிருக்கிறேன்.

குஷ்பு அக்காவிடம் நான்தான் உங்களின் தேர்தல் பிரச்சாரகர். வேறு யாரையும் நியமிக்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறேன். போட்டி, பொறாமை இல்லாத ஜனநாயகம்தான் பாஜகவில் இருக்கிறது.

பாஜகவில் பிரபலங்களுக்கு, குறிப்பாகப் புதிதாகக் கட்சியில் இணைபவர்களுக்கு உடனே சீட் வழங்கப்படுகிறதே?

இதில் என்ன தவறு? யாராக இருந்தாலும் திறமை இருந்தால் உரிய மரியாதையை அளிக்க வேண்டும். அவர்களின் வயதோ, கட்சிக்கு நேற்றோ, இன்றோ வந்தவர்கள் என்பதோ முக்கியமில்லை. பாஜகவில் திறமைக்குத்தான் முழு மரியாதை. உழைப்புக்கேற்ற ஊதியம்தான் பாஜக.

நான் எம்எல்ஏ, எம்.பி. சீட்டுக்கு ஆசைப்பட்டால் கூட, தலைமை அதை நிச்சயம் பரிசீலிக்கும். திறமை இருப்பதால்தான் தேஜஸ்வி சூர்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அண்ணாமலைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் கட்சியில் இணைந்திருந்தாலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவருக்குத் திறமை உள்ளதால்தான் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

கலைக் குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் ஏன் அதிகம் நடிப்பதில்லை?

நடிக்கக்கூடாது என்றில்லை. இதுவரை 5 படங்களில் நடித்திருக்கிறேன். 3 படங்கள் கரோனாவால் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. 'பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்களே, நடிக்க மாட்டீர்களோ என்று நினைத்தேன்' என்று நிறைய இயக்குநர்கள் நேரடியாகவே என்னிடம் கூறியிருக்கின்றனர். இந்த பிம்பம் உடைய வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.

எந்த ரோல் கொடுத்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதைத் தயாரித்தாலும் நடிப்பேன். கொள்கை வேறு, தொழில் வேறு. ஏன் குஷ்புவே 'அண்ணாத்த' படத்தில் நடிக்கிறாரே!

கரோனா காலத்தில் நீங்கள் பேசிய வீடியோ கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டதே? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?

என் குடும்பத்தினர்தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவு. எனது குடும்பத்தில் உள்ள சினிமா நடிகர்கள் பார்க்காத விஷயங்களையா நான் பார்த்துவிட்டேன்? அப்போது இணையம் இல்லை. இப்போது இருக்கிறது, அவ்வளவுதான் வித்தியாசம்.

எவ்வளவுக்கு எவ்வளவு என்னைக் கிண்டல் செய்கிறார்களோ, அந்த அளவுக்கு எனக்குப் புகழ் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மதுவந்தியைக் கிண்டல் செய்வதால், அந்தப் பெயர் தெரிய வந்திருக்கிறது... இப்படி நேர்மறையாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன். என்னை ட்ரோல் செய்யும் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு மதுவந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x