களத்தில் போராட்டம்; நேரில் மரியாதை: பொன்.ராதாகிருஷ்ணன் - விஜய் வசந்த் சந்திப்பு

களத்தில் போராட்டம்; நேரில் மரியாதை: பொன்.ராதாகிருஷ்ணன் - விஜய் வசந்த் சந்திப்பு
Updated on
1 min read

களத்தில் போராட்டம் இருப்பினும் தனிநபர் மரியாதையை என்றும் பேணிக் காப்போம் என்று பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தது தொடர்பாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. 2019-ம் ஆண்டு தேர்தலைப் போலவே இம்முறையும் பாஜக - காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.

பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் மறைந்த எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தும் போட்டியிடுகிறார்கள். இதில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தேசியத் தலைவர்கள் பலரும் வரவுள்ளனர். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து ஆதரவு திரட்டிவிட்டுச் சென்றது நினைவுகூரத்தக்கது.

இன்று (மார்ச் 18) விஜய் வசந்த் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அந்தச் சமயத்திலே பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவே, இருவருமே நேரில் பேசி நட்பு பாராட்டினார்கள். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக விஜய் வசந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றபோது பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டோம். அவரைப் போன்ற மூத்த அரசியல்வாதியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. களத்தில் போராட்டம் இருப்பினும் தனிநபர் மரியாதையை என்றும் பேணிக் காப்போம்".

இவ்வாறு விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in