

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகம் கோபாலபுரத்தில் இருந்து சொந்த இடமான கோயம்பேடு பணிமனைக்கு இடம்பெயர்ந்துள்ளது. அங்குள்ள கட்டுப்பாட்டு மைய கட்டிடத்தில் திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் செயல்படவுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்துவது என்று கொள்கை முடிவெடுத்த தமிழக அரசு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் என்ற ஒன்றை உருவாக்கி அதனை கம்பெனிச் சட்டத்தின் கீழ் 2007-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பதிவு செய்தது. முதல்கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருவழித்தட மெட்ரோ ரயில் பாதை அமைக்க 2009-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. அடுத்த மாதம் 24-ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகராக டெல்லி மெட்ரோ ரயில் கழகம் நியமிக்கப்பட்டது.
2009-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி அப்போதைய தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கோயம்பேடு அசோக்நகர் இடையே மெட்ரோ ரயில் பறக்கும் பாதை அமைக்கும் பணியை முறைப்படி தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் ஆழ்வார்பேட்டை சீத்தாம்மாள் காலனியில் உள்ள குடியிருப்பில் செயல்பட்டது. அப்போது மெட்ரோ ரயிலின் நிறம் கருப்பு, சிவப்பாக இருந்தது. பின்னர், சென்னை கோபாலபுரம், கான்ரான் ஸ்மித் சாலையில் உள்ள “ஹரிணி டவர்ஸ்”க்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகம் இடம்மாறியது. அந்த நேரத்தில் மெட்ரோ ரயிலின் வண்ணமும் புளூ, சிமெண்ட் கலராக மாற்றப்பட்டது.
மேற்சொன்ன இரு இடங்களும் வாடகை கட்டிடங்கள். மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வாடகையாக செலுத்தப்பட்டது. இதற்கிடையே, கோயம்பேட்டில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் பணிமனையில் 8 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் இயக்கக் கட்டுப்பாட்டு மைய கட்டிடத்துக்கு மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை கோபாலபுரம், கான்ரான் ஸ்மித் சாலையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகமும், ராஜா அண்ணாமலைபுரம், சி.பி.ராமசாமி சாலையில் இயங்கி வரும் இந்திய மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கான ஆலோசனை மையமும் கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் உள்ள கட்டுப்பாட்டு மைய கட்டிடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளன.
மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகம் மற்றும் ஆலோசனை மையத்தில் பணிபுரியும் சுமார் 400 அதிகாரிகள், நிபுணர்கள், பணியாளர்கள் மெட்ரோ ரயிலுக்குச் சொந்தமான இடத்தில் பணிபுரிய உள்ளனர். திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் கோயம்பேட்டில் செயல்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோபாலபுரம் அலுவலகத்தில் இருந்து தளவாடச் சாமான்களையும், ஆவணங்களையும் எடுத்துச் செல்லும் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு துறைகளைச் சேர்ந்த பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லப்பட வேண்டியுள்ளது. எப்படியாயினும், இந்த வாரத்தில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகம் கோயம்பேட்டில் உள்ள சொந்த இடத்தில் நிரந்தரமாக செயல்படத் தொடங்கும். அது குறித்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்றார்.