

அதிமுக சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கட்சி என்பது போன்ற மாயையை ஓட்டுக்காக உருவாக்கி வருகிறார்கள் என, நாகையில் முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
நாகை அவுரித்திடலில், நாகை சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரும், நாகை நகர செயலாளருமான தங்க.கதிரவனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று (மார்ச் 18) வாக்கு சேகரித்து பேசியதாவது:
"நாங்கள் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று பொய் பேசி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு தடைகளை, சோதனைகளை தாண்டி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார். அவர் வழிவந்த நாங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறோம்.
திமுகவுக்கு குடும்பம்தான் ஆட்சி. கருணாநிதி அவருக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி என்று திமுகதான் குடும்ப அரசியலை நடத்தி வருகிறது. நீங்கள் என்ன அரச பரம்பரையா, திமுகதான் ஊழல் கட்சி. ஊழல் என்ற வார்த்தை உருவானதே திமுக ஆட்சியில்தான்.
நாங்கள் செய்ததை சொல்கிறோம். செய்யப்போவதை சொல்கிறோம். வீராணம், பூச்சி மருந்து ஊழல், அரிசி ஊழல். இவை எல்லாம் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது. தமிழகத்தில் சாதி சண்டை, மத சண்டை கிடையாது. சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. நான் ஆட்சி செய்த இந்த நான்கரை ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அவர்கள் நிம்மதியாக தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்களை பாதுகாப்பது அதிமுக ஆட்சிதான். அதிமுக சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கட்சி என்பது போன்ற மாயையை ஓட்டுக்காக உருவாக்கி வருகிறார்கள். அது நடக்காது".
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், நாகை சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீன் இறங்கு தளம் அமைக்கப்படும், திருமருகல், தலைஞாயிறு தனி தாலுகாவாக உருவாக்கப்படும் என்பது உட்பட அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை எடுத்து கூறினார்.
முன்னதாக, வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து பேசினார். பின்னர், நாகையிலிருந்து புறப்பட்டு சென்று, பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ பவுன்ராஜ், மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமி, சீர்காழி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் எம்எல்ஏ பாரதி ஆகியோரை ஆதரித்து பேசினார்.