

புதுச்சேரியில் 50 ஆயிரம் பேரின் கருத்துகளைக் கேட்டறிந்து உருவாகும் பாஜக தேர்தல் அறிக்கை வரும் 24-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட வாய்ப்புள்ளது என்று தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி., மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்தனர். தோல்வி பயத்தால் நாராயணசாமி போட்டியிடவில்லை என்று குறிப்பிட்டனர்.
புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் கூட்டாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"புதுவையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க முடிவு செய்தோம். இந்தத் தேர்தல் அறிக்கையை மக்களின் தேவைகளை அறிந்து வாக்குறுதியாக அளிக்கத் திட்டமிட்டோம். இதற்காக 30 தொகுதியிலும் மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தோம். 50 ஆயிரம் பேரிடம் இதன்படி கருத்துகள் முதல் முறையாகச் சேகரிக்கப்பட்டுள்ளன. மக்களின் தேவைகளை அறிந்து அதன்படி தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளோம்.
நாட்டிலேயே முதல் முறையாக கட்சியின் கருத்துகள், பிரதமர் கருத்துகள் இன்றி மக்களின் கருத்துகள் தேர்தல் அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 24-ம் தேதி வெளியிட வாய்ப்புள்ளது. இதில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உதவும்.
கடந்த தேர்தலில் 50க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைத் தந்த புதுச்சேரி காங்கிரஸ் ஒரு சதவீதத்தைக் கூட நிறைவேற்றவில்லை. அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இதுவரை அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் 98 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. மாநில அந்தஸ்து தொடர்பாக தேர்தல் அறிக்கையில் உள்ளதா என்பது பற்றி தற்போது சொல்ல இயலாது. நீங்கள் வரும் 24-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
அதேபோல் பெட்ரோல், டீசல், கேஸ் விலையில் மத்திய அரசு வரி, மாநில அரசு வரி கலந்துள்ளது. மாநில அரசு வரியே அதிகம். விலை குறைப்பு தொடர்பான வாக்குறுதி உள்ளதா என்பதை வரும் 24-ம் தேதி அறியலாம். புதுச்சேரிக்கு விரைவில் பிரதமர், உள்றை அமைச்சர், நட்டா, மத்திய அமைச்சர்கள் அனைவரும் வருகின்றனர்.
காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் இல்லை. இதற்கான பதில் உங்களுக்குத் தெரியும். தோல்வியின் பயத்தால் தேர்தலில் நிற்கவில்லை. முதல்வர் பதவியில் தோல்வி அடைந்தார். தேர்தலில் இரு்ந்து ஓடிவிட்டார்".
இவ்வாறு பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.