

காரைக்கால் மாவட்டம் நிரவி-திருப்பட்டினம் தொகுதியில், முன்னாள் சபாநாயகரின் மகன் வி.எம்.சி.எஸ்.மனோகரன் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் நிலையில், அவரது அண்ணன் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் மறைந்த வி.எம்.சி.சிவக்குமார் மகன் வி.எம்.சி.எஸ்.மனோகரன் நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. பாஜக சார்பில் போட்டியிட வலுவான நபர் இல்லாத நிலையில், மனோகரனை உடனடியாக அணுகி ,கடந்த 16-ம் தேதி பாஜக தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் சேர்த்து அன்று இரவு வெளியிடப்பட்ட பட்டியலில் நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது அண்ணன் வி.எம்.சி.எஸ்.ராஜ கணபதி இதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட இன்று (மார்ச் 18) தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.ஆதர்ஷிடம் மனுத்தாக்கல் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் வி.எம்.சி.எஸ்.ராஜ கணபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், "நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் எனது தந்தை விட்டுச் சென்ற பணிகளையும், கடந்த 5 ஆண்டுகளாக தொய்வுற்ற பணிகளையும் தொடர்வதற்காக சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளேன். 20 ஆண்டுகளாக இத்தொகுதியில் எனது தந்தை சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராகச் செயலாற்றி வந்தார். அதன் பின்னர் வந்த சட்டப்பேரவை உறுப்பினர் சிறப்பாகச் செயல்படவில்லை. தொகுதி மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க போட்டியிடுகிறேன்" என்றார்.