Last Updated : 18 Mar, 2021 02:56 PM

 

Published : 18 Mar 2021 02:56 PM
Last Updated : 18 Mar 2021 02:56 PM

காரைக்காலில் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்த திமுக மருத்துவரணி அமைப்பாளர்

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக, காரைக்கால் திமுக மருத்துவரணி அமைப்பாளரும், மருத்துவருமான விக்னேஸ்வரன் இன்று (மார்ச் 18) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒருசில ஆண்டுகளாக தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு சமூகச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். அதனடிப்படையில் இவர் நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் நெடுங்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

இதனிடையே தேர்தல் அறிவிக்கப்பட்டு, திமுக-காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்த சமயத்தில், காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம் ஆகிய 3 தொகுதிகளை திமுகவுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தீவிரமாகப் வலியுறுத்தப்பட்டுள்ளதாக திமுக அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் கூறியிருந்தார்.

அதிகாரபூர்வமாக தொகுதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே டாக்டர் விக்னேஸ்வரன் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அதிகாரபூர்வமாக பட்டியல் வெளியிடப்பட்டபோது காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம் ஆகிய இரு தொகுதிகள் மட்டுமே திமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. நெடுங்காடு (தனி) தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து நெடுங்காடு தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஏ.மாரிமுத்து நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று டாக்டர் விக்னேஸ்வரன் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சுபாஷிடம் மனுத்தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த 2 ஆண்டுகளாக நெடுங்காடு தொகுதியில் பலவேறு சமூகப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் செய்து கொண்டிருந்தேன். இத்தொகுதி நிச்சயமாக திமுகவுக்குத்தான் ஒதுக்கப்படும் என அனைவரும் நம்பியிருந்த வேளையில், சில சூழ்ச்சிகளாலும், ஒருசில அசம்பாவிதங்களாலும் இத்தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் நான் துவண்டுவிடாமல் எனது நலம் விரும்பிகளின் ஆதரவுடன் மக்களை மட்டுமே நம்பி, மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன். மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை நான் கட்சியில் எந்தவித ராஜினாமாவும் செய்யவில்லை. சுயேச்சையாக நிற்பதால் கட்சித் தலைமை ஏதாவது முடிவெடுக்குமா என்பது தெரியவில்லை. அது அமைப்பாளரைப் பொறுத்தது'' என்று விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x