Published : 18 Mar 2021 02:09 PM
Last Updated : 18 Mar 2021 02:09 PM

200 அல்ல; 234 இடங்களிலும் திமுகதான் வெற்றி பெறும்: ஸ்டாலின் பேச்சு

200 அல்ல 234 இடங்களிலும் திமுகதான் வெற்றி பெறப் போகிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 18), தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது, கும்மிடிப்பூண்டியில் பொதுமக்களிடையே பேசியதாவது:

"கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டவற்றை நான் பட்டியலிடுகிறேன். இதேபோல, முதல்வர் பழனிசாமி தான் செய்தவற்றைப் பட்டியல் போட்டுச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறாரா?

ஆளுங்கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

செய்ய முடியாத காரியங்களை, வாய்க்கு வந்தபடியெல்லாம், பொத்தாம் பொதுவாக பல உறுதிமொழிகளைச் சொல்லி இருக்கிறார். அதில் எது நடக்கும் எது நடக்காது என்று மக்களுக்குத் தெரியும். ஏற்கெனவே 2011, 2016 தேர்தலைச் சந்தித்தபோது சொல்லியிருக்கும் உறுதிமொழிகள் என்ன நிலையில் இப்போது இருக்கின்றன என்பதை பழனிசாமி சொல்வதற்குத் தயாராக இருக்கிறாரா?

உதாரணமாக, அனைவருக்கும் செல்போன் இலவசமாகக் கொடுப்போம் என்று சொன்னார். அதை இப்போதும் சொல்லி இருக்கிறார். இங்கு இருக்கும் யாருக்காவது அதிமுக ஆட்சியில் இலவசமாக செல்போன் கொடுத்து இருக்கிறார்களா?

அதேபோல, கேபிள் கட்டணத்தை 70 ரூபாய்க்குக் குறைப்போம் என்று ஒரு உறுதிமொழி கொடுத்தார்கள். குறைத்திருக்கிறார்களா? பொது இடங்களில் வைஃபை வசதி செய்து கொடுப்போம் என்று சொன்னார்கள். கொடுத்திருக்கிறார்களா? 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னார்கள். எவ்வளவு லட்சம் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன?

திருச்சி, மதுரை, கோவையில் மோனோ ரயில் விடப்போகிறோம் என்று சொன்னார்கள். அது வெறும் பேப்பரில் தான் இருக்கிறது. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் போடப்படாது என்று சொன்னார்கள். அது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?

ஆவின் பால் லிட்டர் 25 ரூபாய்க்கு தருவோம் என்று சொன்னார்கள். இப்போது 60 ரூபாய்.

அதேபோல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நீட் தேர்வை நாங்கள் உள்ளே விட மாட்டோம் என்று சொன்னார்கள். இதுவரையில் அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறதா? இதுவரையில் அனிதா தொடங்கி பல பேர் அந்த நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள்.

இந்த நீட் தேர்வுக்காக சட்டப்பேரவையில் நாங்கள் தீர்மானமே போட்டோம். இதுவரையில் அது என்ன நிலையில் இருக்கிறது? என்று மத்திய அரசிடம், மாநில அரசு கேட்கத் தயாராக இல்லை. அவர்கள் கைகட்டி அடிமை ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்.

நான் எப்போதும் என்ன சொல்வேன் என்று பார்த்துக்கொண்டே இருப்பார் பழனிசாமி. எனவே, நான் சொல்வதைப் பார்த்துதான் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் என்று அவர் அறிவித்தார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு இருக்கும் நகைக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று நான் சொன்னேன். இதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலும் சொன்னேன். அதை மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டதாக முதல்வர் பழனிசாமி அப்போது விமர்சித்தார். இப்போது அறிவித்திருக்கிறீர்களே, நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றப் போகிறீர்களா?

நான் உறுதியோடு சொல்கிறேன். எவ்வாறு கருணாநிதி சொன்னதைச் செய்தாரோ அதேபோல, அவருடைய மகனும் சொன்னதைத் தான் செய்வான்.

நாம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப் போகிறோம் என்று சொன்னேன். இப்போது 5 நாட்களாக நான் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கும் இந்தப் பயணத்தில் நான் உணர்ந்ததை வைத்துச் சொல்கிறேன், 200 அல்ல 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்.

ஒரு இடத்தில் கூட பாஜக மற்றும் அதிமுக வெற்றி பெற்றுவிடக் கூடாது. அதிமுக வெற்றி பெற்றால் அது பாஜகவின் வெற்றிதான். இன்றைக்கு அதிமுக - பாஜகவின் அடிமையாக இருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது, ஒரே ஒரு எம்.பி. அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். அவர் இப்போது பாஜக எம்.பி.யாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் உண்மையான நிலை. அந்த அளவுக்கு அடிமையாக இருக்கிறார்கள். எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

இன்றைக்கு விலைவாசி என்ன நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். உளுத்தம் பருப்பு திமுக ஆட்சியில் ஒரு கிலோ 60 ரூபாய் - இப்போது 120. துவரம் பருப்பு திமுக ஆட்சியில் ஒரு கிலோ 38 ரூபாய் - இப்போது 120. கடலை பருப்பு திமுக ஆட்சியில் ஒரு கிலோ 34 - இப்போது 150. பாமாயில் ஒரு லிட்டர் திமுக ஆட்சியில் 48 - இப்போது 126. சர்க்கரை ஒரு கிலோ திமுக ஆட்சியில் 18 - இப்போது 40. சிலிண்டர் ஒன்று திமுக ஆட்சியில் 400 - இப்போது 900. பால் ஒரு லிட்டர் திமுக ஆட்சியில் 35 - இப்போது 60. இப்படி விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x