Last Updated : 18 Mar, 2021 01:50 PM

 

Published : 18 Mar 2021 01:50 PM
Last Updated : 18 Mar 2021 01:50 PM

தஞ்சாவூரில் அதிகரிக்கும் கரோனா: கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் 6 மாணவிகள் உள்பட 7 பேருக்குத் தொற்று

பிரதிநிதித்துவப் படம்.

கும்பகோணம்

கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் பயிலும் 6 மாணவிகள் உள்பட 7 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டதில் ஒரு மாணவிக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனை முகாமில் 57 மாணவிகள், ஒரு ஆசிரியை, 12 பெற்றோருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணிக்க, வட்டாட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று கும்பகோணத்தில் 6 மாணவிகள்,1 ஆசிரியைக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று (18-ம் தேதி) மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் கும்பகோணம் பெசண்ட் ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று, அங்கு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறும்போது, ''தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 பள்ளிகளில் தலா மூன்று பேருக்கும் மேல் கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மூன்று பேருக்கு மேல் கரோனா இருந்ததால் அந்தப் பள்ளிகளுக்கு ஒரு வார காலத்துக்கு விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத பள்ளிகளின் நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கும்பகோணத்தில் உள்ள மகளிர் பள்ளியில் நேற்று (17-ம் தேதி) 100 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், 6 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, பள்ளியில் படிக்கும் 1,100 மாணவிகளுக்கும் பரிசோதனை செய்யவும், பள்ளிக்கு ஒரு வாரத்துக்கு விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x