

தேர்தல் சமயத்தில் மாற்றுக் கட்சியினரின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது, பாஜகவின் அதிகார அத்துமீறல் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முத்தரசன் இன்று (மார்ச் 18) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 நடைமுறைகள் தொடங்கியுள்ளன. பல்முனைப் போட்டி ஏற்பட்டிருந்தாலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கும் பாஜக - அதிமுக கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. இதில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி பெறும், பெற வேண்டும் என்ற உணர்வு மக்களிடம் மேலோங்கியுள்ளது.
ஆளும் கட்சியினர் இந்த நிலையில் தொழில் நிறுவனங்களை மிரட்டி அச்சுறுத்தி பணம் பறிக்கவும், எதிர்க்கட்சியினரை மிரட்டி பணிய வைக்கவும், தங்களுக்குரிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரை பயன்படுத்தி வருகிறது.
தாராபுரம் தொகுதியில் மதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் கவின் நாகராஜ் மற்றும் திமுக நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகரன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
திருப்பூரில் மற்றொரு கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு முன்னணி சிமென்ட் நிறுவனத்திலும் இதனைத் தொடர்ந்து, பழனி பஞ்சாமிர்தம் உற்பத்தி நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
நியாயமான தேர்தல் நடைமுறைக்கு எதிரான பாஜகவின் அதிகார அத்துமீறல்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நடைமுறை உடனடியாக கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.