Published : 18 Mar 2021 01:04 PM
Last Updated : 18 Mar 2021 01:04 PM

குஷ்புவுக்குக் கூடத்தான் கூட்டம் சேர்கிறது; வாக்குகளாக மாறுமா? --கூட்டணிக் கட்சி வேட்பாளரே பேசியதால் சர்ச்சை

ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் குஷ்புவுக்குக் கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறாது என்று கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளர் கஸ்ஸாலி பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துத் திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் களம் காண்கிறார்.

இதற்கிடையே தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கஸ்ஸாலி தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் உதயநிதியால் செல்ல முடியாது. யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். சட்டப்பேரவைக்கு உறுப்பினராக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனுப்புகிறார்களே. ஒருவராவது வீதிக்குள், சந்துக்குள் சென்று மக்களைச் சந்தித்தார்களா? இல்லையே.

ஆனால் நான் சேப்பாக்கத்தில் வீதி, வீதியாகச் சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது'' என்று .கஸ்ஸாலி தெரிவித்தார்.

அப்போது உதயநிதிக்குக் கூட்டம் கூடுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ''மக்கள் அவரை சினிமாக்காரராகப் பார்க்கிறார்கள். குஷ்புவுக்குக் கூடத்தான் கூட்டம் சேர்கிறது. எந்த சினிமாக்காரர் சென்றாலும் கூட்டம் சேரும். அது எப்படி வாக்காக மாறும் என்று கணக்கீடு செய்கிறீர்கள்?

உங்கள் அனைவருக்குமே தெரியும். சினிமாக்காரர்கள் என்றால் எல்லோரும் 'ஆ'வென்று பார்ப்பார்கள். மக்களின் பலவீனமே அதுதான். ஆனால் அதுவே வாக்குகளாக மாறாது. பணி செய்பவர்களைத்தான் பார்க்க வேண்டும்'' என்று ஏ.வி.ஏ.கஸ்ஸாலி தெரிவித்தார்.

தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் குஷ்பு குறித்து, கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளரே விமர்சித்துள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x