

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பி.முர்த்தி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.டி.ஓ.முருகானந்தத்திடம் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது, அவருடன் மதுரை கிழக்கு ஒன்றியச் செயலாளர் அ.பா.ரகுபதி, பகுதி செயலாளர் சசிகுமார் உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த பி.மூர்த்தி எம்எல்ஏ. நிருபர்களிடம் கூறுகையில், "கிழக்கு தொகுதியில் இரண்டாவது முறையாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன். ஏற்கெனவே இத்தொகுதியில் 5 ஆண்டுகள் எம்எல்ஏ ஆக இருந்து பணி செய்திருக்கிறேன். இந்த ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு பணி செய்யும் தொண்டனாக 5 ஆண்டு மீண்டும் தொடர்ந்து பணி செய்திட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். நிச்சயம் கிழக்கு தொகுதி மக்களின் ஆதரவைப் பெற்ற வேட்பாளராக எனக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்" என்றார்.
தொடர்ந்து அவர், ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், "அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத அரசாக இன்றைய அரசு உள்ளது.நான் வெற்றி பெற்றவுடன் மீண்டும் கிழக்கு தொகுதியில் கலைக்கல்லூரி கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.
உங்களில் ஒருவனாக இருந்து கிழக்கு தொகுதி மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். இப்பகுதியில் உள்ள வேளாண் கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றுவோம் எனக் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.
உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களின் தொண்டனாக இருந்து பணி செய்ய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்" என்றார்.
இதனைத்தொடர்ந்து, மாற்று வேட்பாளராக மேற்கு ஒன்றிய செயலாளர் சிறை செல்வன், மனுத்தாக்கல் செய்தார்