Last Updated : 18 Mar, 2021 12:15 PM

 

Published : 18 Mar 2021 12:15 PM
Last Updated : 18 Mar 2021 12:15 PM

தமிழகம் ஆட்சி மாற்றத்தை நோக்கி நகர்கிறது; திமுகவுக்கு எதிராக பாஜக மேற்கொள்ளும் 'இந்து விரோதக் கட்சி' பிரச்சாரம் தவிடுபொடியாக்கப்படும்: முத்தரசன் பேட்டி

தமிழகம் ஆட்சி மாற்றத்தை நோக்கி நகர்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் பலமும், கூட்டணி பலமும் சாதகமாக இருப்பதால் தமிழகத்தில் நிச்சயமாக திமுக ஆட்சி அமையும். திமுகவுக்கு எதிராக பாஜக முன்னெடுக்கும் 'இந்து விரோதக் கட்சி' பிரச்சாரத்தை தேர்தல் முடிவுகள் தவிடுபொடியாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன.

பெரும்பாலான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்கே சாதகமாக வெளியாகியுள்ள நிலையில், திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு, பாஜகவின் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு, இரா.முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

தேர்தல் முடிவு என்பது அரசியல் பலம் மற்றும் கூட்டணி பலத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, அந்த இரண்டுமே திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலினின் பிரச்சாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுவும் குறிப்பாக, திருவாரூரில் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது கூட்டணிக் கட்சியினரும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டு ஆதரவு அளித்தனர். இது நிச்சயமாக தமிழகம் ஆட்சி மாற்றத்தை நோக்கி நகர்வதற்கான அறிகுறி.

ஆனால், மாநிலத்தில் ஆளும் அதிமுகவுக்கு எதிர்ப்பலை ஏதுமில்லை என்றொரு பார்வை நிலவுகிறதே?

இது திட்டமிட்டு ஆளும் கட்சியே மேற்கொள்ளும் பிரச்சாரம். அவர்களே, அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் இல்லை என்ற கருத்தைப் பரப்புகிறார்கள். ஆனால், உண்மை முற்றிலுமாக வேறு.

இதற்கு, நாம் டெல்டா மாவட்டங்களை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அங்கே கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் இன்னும் அது விட்டுச்சென்ற கோரத் தாக்கதிலிருந்து விடுபடவில்லை. பல இடங்களில் முறிந்துவிழுந்த தென்னை மரங்களைக் கூட அப்புறப்படுத்தமுடியாமல் இருக்கின்றனர். முதல்வர் நிவாரணத் தொகை அறிவித்திருந்தாலும் கூட அது இன்னும் விவசாயிகளைச் சென்று சேரவில்லை. பயிர்க் காப்பீட்டுத் தொகையையும் முழுமையாகப் பெற முடியவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தார். அதற்குக் காரணமாக இருந்ததே விவசாயிகள் போராட்டம்தான். திருவாரூரில் நடந்த போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இறந்த விவசாயியின் உடலை அப்புறப்படுத்த மறுத்து விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அப்போது 4 அமைச்சர்கள் கொண்ட குழுவை ஓபிஎஸ் அமைத்தார். அதன் பின்னரே அவர் சென்னை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்தார். விவசாயக் கடன் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார். ஆனால், அது இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை. இதுதான் நிலைமை.

பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.5000 உதவித்தொகை அளிக்கக் கோரி எங்கள் கூட்டணி கறுப்புக் கொடி ஏந்தி போராட்டங்கள் மேற்கொண்டது. அரசாங்கம் வெறும் ரூ.1000 மட்டுமே கொடுத்தது. இப்போது திமுக, தனது தேர்தல் அறிக்கையில் எல்லாக் குடும்பங்களுக்கும் ரூ.4000 நிவாரணம் அறிவித்துள்ளது.

இப்படியாக, அரசாங்கத்துக்கு எதிரான கோபம் தெளிவாகப் புலப்படுகிறது.

தங்களின் தேர்தல் அறிக்கையை திமுக இத்தேர்தலின் ’2வது கதாநாயகன்’ என விளித்தாலும், அதில் மதுவிலக்கு பற்றி எதுவும் இல்லையே?

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தார். ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்குத் தருவதாகக் கூறினார். மதிய உணவில் மாணவர்களுக்கு முட்டை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். இத்திட்டத்திற்கு அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்றவுடனேயே கருணாநிதி, இலவச வண்ணத் தொலைக்காட்சி உள்பட மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்றினார். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் அவரால் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்க இயலவில்லை.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

கடந்த தேர்தலில், ஜெயலலிதாவும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாகக் கூறினார். ஆனால், அதிமுக அரசோ மதுக்கடைகளை மூடுவதற்குப் பதிலாக அதன் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டு இருக்கிறது.

விழாக்காலங்களில் மதுக்கடை வருமானத்துக்கு வரையறை நிர்ணயித்து வியாபாரம் செய்கிறது. நாங்கள் எப்போதுமே மதுவிலக்கு கோரி போராடுபவர்கள். ஆகையால், எங்கள் கூட்டணி மதுவிலக்கை நிச்சயமாக படிப்படியாக நிறைவேற்றும்.

திமுக ‘இந்து விரோதக் கட்சி’ என்று பாஜக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?

நாங்கள் இந்தப் பிரச்சாரத்துக்கு ஏற்கெனவே பதிலளித்துவிட்டோம். 1971-ல் ராஜாஜியும், காமராஜரும் திமுகவுக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கினர். அப்போதும் இதேபோன்றதொரு பிரச்சாரம் இந்திரா காந்தி தலைமை வகித்த இந்திய தேசிய காங்கிரஸை உள்ளடக்கிய திமுக கூட்டணிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது. அப்போது திமுக கூட்டணிக்குப் பெரியார் துணை நின்றார்.

மத நம்பிக்கை உள்ள எவரும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இந்திரா காந்தி மீது தனிப்பட்ட விமர்சனங்களைக்கூட காமராஜர் முன்வைத்தார். எல்லா ஊடகங்களும் திமுக தோல்வியைத் தழுவும் எனக் கணிப்புகளை வெளியிட்டன.

ஆனால், மக்கள் வேறு ஒரு தீர்ப்பு எழுதினார்கள். திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அதே நிலை மீண்டும் வரும். திமுகவுக்கு எதிராக பாஜக முன்னெடுக்கும் 'இந்து விரோதக் கட்சி' பிரச்சாரம் தவிடுபொடியாக்கப்படும்.

பாஜக வெற்றிவேல் யாத்திரை மேற்கொண்டது. முருகன் தமிழ்க் கடவுள். அவர் பிற சமூகப் பெண்களைத் திருமணம் செய்ததாக புராணம் இருக்கிறது. அப்படியென்றால், பாஜக சாதி மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்கிறதா?

தமிழகத்தில் காங்கிரஸுடன் கூட்டணி, அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸுக்கு எதிர்ப்பு? இடதுசாரிகளின் இந்தக் கொள்கை தவறான சமிக்ஞைகளைக் கடத்தாதா?

கேரளாவில் இரண்டு முன்னணிகள் மட்டுமே உள்ளன. ஒன்று இடதுசாரிகள் தலைமையிலானது, இரண்டாவது காங்கிரஸ் தலைமையிலானது. ஆனால், சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது இடதுசாரிகளும், காங்கிரஸும் ஒருசேர ஆமோதித்தன. பாஜகவை எதிர்க்கும் தருணத்தில் இடதுசாரிகளுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கருத்து வேறுபாடே வந்ததில்லை.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x