

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அமைச்சரவையில் பாஜக இடம்பெறுவது குறித்து மத்தியத் தலைமையே முடிவு செய்யும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், காலையில் திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தரிசனத்தை முடித்து விட்டுத் தாராபுரம் சென்ற அவர், முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எல்.முருகன் கூறுகையில், ''வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக கார்த்திகை தினமான இன்று (மார்ச் 18), பழநி முருகனை வேண்டி வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளேன்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அமைச்சரவையில் பாஜக இடம்பெறுவது குறித்து மத்தியத் தலைமையே முடிவு செய்யும்.
பழநி தொகுதியில் பாரதிய ஜனதா போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில், தொகுதி கிடைக்காவிட்டாலும் அதை ஒட்டியுள்ள தாராபுரம் தொகுதி கிடைத்துள்ளது பெருமகிழ்ச்சி. கூட்டணி தர்மத்தை மதித்து அதிமுக வெற்றி பெற, பாஜக பாடுபடும்'' என்று தெரிவித்தார்.
அப்போது பழநி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.