Published : 18 Mar 2021 10:52 AM
Last Updated : 18 Mar 2021 10:52 AM

அதிகரிக்கும் கரோனா; சுகாதாரத்துறை அறிவுறுத்தலை மக்கள் பின்பற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை

அதிகரித்து வரும் கரோனா தொற்று கவலையளிக்கிறது. மிகக் கவனமாக நடவடிக்கை எடுத்து கட்டுப்பாட்டுக்குள் வந்த கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் சுகாதாரத்துறை வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

''கரோனா தொற்றுநோய்ப் பரவலை மேலும் கட்டுப்படுத்தவும், அதிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும் தமிழக சுகாதாரத்துறை வெளியிடும் அறிவிப்புகளைப் பொதுமக்கள் கடைப்பிடித்து அரசுக்கு உதவிகரமாக இருந்து கரோனாவினால் இனி பாதிப்பில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வந்த வேளையில் மீண்டும் பரவல் அதிகமாயிருப்பதைப் பொதுமக்கள் மிக முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். உலகமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் இந்தியாவிலும் கரோனாவின் தாக்கம் இருந்தாலும் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வந்ததால் பொதுமக்கள் ஓரளவுக்கு ஆறுதலாக, நிம்மதியாக இருந்தார்கள்.

குறிப்பாக சுகாதாரத்துறையின் நெறிமுறைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பினர், காவல்துறையினர் ஆகியோரது அர்ப்பணிப்பான, சேவை மனப்பான்மையான பணி, தடுப்பூசி ஆகியவற்றால் கரோனாவின் தாக்கம் குறைந்துகொண்டு வந்தது.

மேலும், கரோனா பரிசோதனை, குணப்படுத்தப்படும் முறைகள், தொடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்து வந்தது. இதுவரை 16 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதும், தொடர்ந்து பொதுமக்களுக்குச் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருவதும் நல்ல பலனளிக்கிறது.

ஆனால், தமிழகம் உள்பட நாடு முழுவதும் மீண்டும் கடந்த ஒரு வாரகாலமாக கரோனா பரவல் அதிகமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மீண்டும் கரோனா பரவல் அதிகமாயிருக்கின்ற வேளையில் நேற்றைய தினம் மேலும் 945 பேருக்கு கரோனா தொற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவசிய, அவசர நடவடிக்கைகளைச் சுகாதாரத்துறை எடுப்பது மிகவும் இன்றையமையாதது.

ஏற்கெனவே தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கரோனா பாதிப்பைக் கண்டறிந்து, குணப்படுத்தி, குறைந்த அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. அதாவது நாட்டிலேயே கரோனா தொடர்பாக சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதும், மக்களைப் பாதுகாப்பதில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்ததும் தமிழகம்தான்.

இப்போதும் கரோனா பரவல் அதிகமாகியிருக்கின்ற சமயத்தில் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பினர், காவல்துறையினர் மேற்கொள்கின்ற சிறப்பான நடவடிக்கைகள் பொதுமக்கள் நலன் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பதால் அவர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தமிழகத்தில் கரோனாவுக்கு எதிராக தமிழக அரசு, சுகாதாரத்துறை அறிவிக்கும் அறிவிப்புகளை தமிழக மக்கள் கவனத்தில் கொண்டு, வெளியிடும் நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து அரசுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x