Published : 18 Mar 2021 10:35 AM
Last Updated : 18 Mar 2021 10:35 AM

உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி: நிறுத்தி வைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

உப்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வழங்கிய சுற்றுச்சூழல் ஒப்புதலை நிறுத்தி வைக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 800 மெகாவாட் உற்பத்தித் திறனுடன், இரு அனல் மின் நிலையங்கள் அமைக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் ஒப்புதல் கோரி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு விண்ணப்பித்தது.

இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஒப்புதல் வழங்கிப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அப்பகுதி மக்கள் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த மனுவில், அனல் மின் நிலையம் அமைப்பதற்காகக் கையகப்படுத்த திட்டமிடப்பட்ட, ஆயிரத்து 342 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்கள் எனவும், எந்தப் பொது விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு முறையாக நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க வழங்கிய ஒப்புதல் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, அதை நிறுத்திவைக்க உத்தரவி்ட்டது.

மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு மீண்டும் ஆய்வு செய்து, ஆறு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் எனவும், அதுவரை உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x