சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் தோப்பு வெங்கடாச்சலம்: அதிமுகவில் வாய்ப்பு வழங்காததால் முடிவு

முதல்வர் எடப்பாடியுடன் தோப்பு வெங்கடாச்சலம்.
முதல்வர் எடப்பாடியுடன் தோப்பு வெங்கடாச்சலம்.
Updated on
2 min read

பெருந்துறை தொகுதியில் தனக்குப் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு வழங்காததால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்.

அதிமுகவில் பெருந்துறை தொகுதியில் 2011-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் தோப்பு வெங்கடாச்சலம். அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி அளித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தோப்பு வெங்கடாச்சலம் பதவி வகித்தார். பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் தோப்பு வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார்.

ஆனால், இம்முறை ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கவில்லை. அதன் பின்னர் டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவும், 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவையும் பங்கேற்றது. அந்த அமைச்சரவையில் ஜெயலலிதா அமைத்த அதே அமைச்சர்கள் பங்கேற்றனர். கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் சேர்க்கப்பட்டார்.

கடந்த 5 ஆண்டுகளாகத் தனக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என தோப்பு வெங்கடாச்சலம் எதிர்பார்த்தார். எந்த மாற்றமும் வரவில்லை. தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெருந்துறை தொகுதியில் போட்டியிட மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால், தொகுதியில் மூத்த அரசியல்வாதியான அவருக்கு அதிமுகவில் சீட் வழங்கவில்லை.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியச் செயலாளர் ஜெயகுமார் என்பவருக்கு நிற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனக்கு சீட்டு வழங்காதது குறித்து ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய தோப்பு வெங்கடாச்சலம், நான் என்ன தவறு செய்தேன், கட்சிக்காக உழைத்த என்னை கறிவேப்பிலை போல் தூக்கி எறிந்துவிட்டார்களே என கண்ணீர் விட்டு அழுதார். அதைப் பார்த்த தொண்டர்களும் அழுதனர்.

ஆனாலும், அதிமுக தலைமை மனம் இறங்கவில்லை. இதையடுத்து தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார். இன்று மதியம் அவர் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

இதனால் அங்கு அதிமுக வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரைச் சமாதானப்படுத்தி அவருக்கு வாய்ப்பளிக்கப்படுமா? அல்லது அவர் சுயேச்சையாகப் போட்டியிடுவாரா என்பது இனிதான் தெரியவரும்.

பெருந்துறை தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் கே.கே.சி.பாலு போட்டியிடுகிறார். கடந்த முறை தனியாக நின்று கணிசமாக வாக்குகள் பெற்ற கொமதேக தற்போது திமுக கூட்டணியில் உள்ளதாலும், தோப்பு வெங்கடாச்சலம் போட்டியில் உள்ளதாலும் அதிமுக வேட்பாளருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in