Published : 18 Mar 2021 08:44 AM
Last Updated : 18 Mar 2021 08:44 AM

கூரை வீடு; ரூ.1.75 லட்சம் சொத்து மதிப்பு; ஆனாலும் அரசியலே இவருக்கு மூச்சு: திருத்துறைப்பூண்டி இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து- ஓர் அறிமுகம்

அரசியல் என் மூச்சு; மக்கள் சேவைக்கு வறுமை என்றுமே தடையல்ல எனக் கூறுகிறார் திருத்துறைப்பூண்டி இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனித் தொகுதி வேட்பாளர் மாரிமுத்து. கடுவுக்குடி எனும் பகுதியில் இருக்கிறது இவரது வீடு. வீடு என்றால் கான்கிரீட் கட்டிடம் இல்லை. குடிசை வேய்ந்த பழைய வீடு. முற்றத்திலிருந்து தலை தாழ்ந்து வீட்டினுள் நுழைய வேண்டும். இவரது மனைவி ஜெயசுதா ஒரு விவசாயக் கூலி. மகன், மகள் பள்ளியில் படிக்கின்றனர்.

49 வயதான மாரிமுத்து தன் வாழ்நாளில் பாதிக்கும் மேலான காலத்தை சமூகப் போராளியாக, கட்சிப் பணியை மேற்கொண்டிருக்கிறார்.

மாரிமுத்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி:

''நான் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். பட்டியலினத்தைச் சேர்ந்தவன். வணிகவியலில் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அரசியல்தான் என் மூச்சு. எனக்கு வேறு தொழில் கிடையாது. என் மனைவி விவசாயக் கூலியாக இருக்கிறார். குத்தகைக்கு எடுத்துள்ள நிலத்தில் நாங்கள் விளைபொருட்களை விளைவிக்கிறோம். எளிமையான, தன்னிறைவான வாழ்வு. 1994-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னைப் போன்ற சாமானிய மக்களுக்குக் குரல் கொடுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்னை ஈர்த்தது. மக்கள் சேவை மட்டுமே என் குறிக்கோள்.

நான் களம் காணும் தொகுதியில், நலிவுற்ற விவசாயிகள், நிலமற்ற தினக்கூலிகள் அதிகம் இருக்கின்றனர். ஒருவேளை தேர்தலில் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்தால், விவசாயிகள், தினக்கூலிகளுக்கு அரசு திட்டங்கள் சென்று சேர பாடுபடுவேன். வீட்டுமனைப் பட்டாக்கள் பெற்றுத் தருவேன்.

தொகுதியின் மிகப்பெரிய பிரச்சினை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை. இதனால் இளைஞர்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றனர். இத்தொகுதியில், வைக்கோல் அதிகம் கிடைப்பதால் இங்கு காகித ஆலை அமைந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதை உறுதி செய்வேன்.

எனது தொகுதி சமூக, பொருளாதார, கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கிய தொகுதி. இத்தொகுதியை மேம்படுத்தும் வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கத் தொடர்ந்து முயல்வேன். கடல்நீர் உட்புகுதலால் ஏற்படும் நில அரிப்பு இங்கு மற்றொரு பிரச்சினை. அதைச் சரி செய்யவும் நான் நடவடிக்கை எடுப்பேன். தவிர முத்துப்பேட்டை சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாத்து அங்கு சுற்றுலாவையும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்''.

இவ்வாறு மாரிமுத்து பேசினார்.

மாரிமுத்துவின் மொத்த சொத்து விவரம்

மாரிமுத்து நேற்று (புதன்கிழமை) வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருக்கு 75 சென்ட் நிலம் இருக்கிறது. அதன் மதிப்பு ரூ.1.75 லட்சம். கையில் இருக்கும் ரொக்கப் பண மதிப்பு ரூ.3000. வங்கிக் கணக்கில் ரூ.58,000 உள்ளது. அவரது மனைவி, மகளுக்கு 3 பவுன் தங்க நகைகள் உள்ளன.

11 முறை வெற்றி தந்த தொகுதி

1962 முதல் இத்தொகுதியில் இடதுசாரிக் கட்சிகள் 11 முறை வெற்றி கண்டுள்ளன. இருந்தாலும் 2016 தேர்தலில் இத்தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்க்கவில்லை. இந்நிலையில், இம்முறை வெற்றி நிச்சயம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மாரிமுத்து.

இத்தொகுதியில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் குமார் களம் காண்கிறார். இவரின் சொத்து மதிப்பு ஆவணங்களின்படி ரூ.20 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.கணேசன் ( 'தி இந்து' ஆங்கிலம்) தமிழில்: பாரதி ஆனந்த்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x