

நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கப்போவதாக அறிவித்தபோது, தனது கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை அறிவித்தார். ஆனால், ரஜினி திடீரென கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என அறிவித்ததையடுத்து, அர்ஜுன மூர்த்தி பிப்.27-ல் ‘இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
தனது கட்சிக்கு ‘ரோபோ’ சின்னத்தைப் பெற்ற இவர், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக தெரிவித்தார். இந்நிலையில், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நேற்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: நாங்கள் கட்சி ஆரம்பிப்பதற்கு முந்தைய தினமே தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவுக்கு மிக குறுகிய காலமே இருப்பதால் வேட்பாளர் தேர்வு, வாக்கு சேகரிப்பு, தேர்தலுக்கு தேவையான வளங்கள் சேகரிப்பு, சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகியவற்றை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. எங்களது வேட்பாளர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருப்பதால் அவர்களைப் பற்றி ஆராய்ந்து, வாய்ப்பு அளிக்க நினைத்தேன். ஆனால் மிக குறுகிய காலத்தில் சரியான வேட்பாளரை தேர்வு செய்வது மிகவும் கடினமாகும்.
மேலும், நாடு முழுவதும் மீண்டும் கரோனா அதிகரித்து வருவதால் தேர்தல் பணி செய்வது சிரமமாக உள்ளது. எனவே வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளோம். நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து, தேர்தலில் யாரை ஆதரிப்பது என முடிவெடுக்கப்படும் என்றார்.