தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 2 ஆயிரத்தை தாண்டிய வேட்பு மனுக்கள்: 4-ம் நாளான நேற்று மட்டும் 964 பேர் தாக்கல் செய்தனர்

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 2 ஆயிரத்தை தாண்டிய வேட்பு மனுக்கள்: 4-ம் நாளான நேற்று மட்டும் 964 பேர் தாக்கல் செய்தனர்
Updated on
1 min read

தமிழகத்தில் 234 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. நேற்று மட்டும் 964 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, கடந்த மார்ச் 12-ம்தேதி வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. மனுத்தாக்கலின் முதல்நாள் 59 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து திங்கள்கிழமை வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால், எடப்பாடியில் முதல்வர்பழனிசாமி, சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோவை தெற்கு தொகுதியில்மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்கமல்ஹாசன், திருவொற்றியூர் தொகுதியில் சீமான், கோவில்பட்டியில் டிடிவி தினகரன் உட்பட பலகட்சிகளின் தலைவர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுத்தாக்கலின் 4-ம் நாளான நேற்று அதிகமானவர்கள் மனுக்களை தாக்கல் செய்தனர். குறிப்பாக, சென்னை கொளத்தூரில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம், அமமுகவின் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏ.ஜெகதீஷ்குமார், நாம் தமிழர்பெ.கெமிலஸ் செல்வா, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் பாமகவின் கஸ்ஸாலி, நாம் தமிழர் கட்சியின் ஜெயசிம்மராஜா, மயிலாப்பூரில் அதிமுகவின் ஆர்.நடராஜ், திமுகவின் த.வேலு, மநீம சார்பில் நடிகை  பிரியா,அமமுகவின் டி.கார்த்திக் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

அதேபோல், ஆர்.கே.நகரில் திமுகவின் ஜான் எபிநேசர், மநீம- பாசில், பெரம்பூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், துறைமுகத்தில் பாஜகவின் வினோஜ் பி.செல்வம், அமமுகவின் சந்தானகிருஷ்ணன், வேளச்சேரியில் மநீம சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு உள்ளிட்டோர் மனுத்தாக்கல்செய்தனர். சென்னையில் மட்டும்இதுவரை 4 நாட்களில் 160-க்கும்மேற்பட்டவர்கள் மனுத்தாக்கல்செய்துள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் பிரபலங்கள் பலர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 4 நாட்களில் 1,808 ஆண், 383 பெண், மதுரை தெற்கு தொகுதியில் 1 மூன்றாம் பாலினத்தவர் என 2,192 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்றுமட்டும் இரவு 9.30 மணி நிலவரப்படி 795 ஆண், 173 பெண், ஒரு 3-ம்பாலினத்தவர் என 964 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதுவரை தாக்கலான மனுக்களின் எண்ணிக்கை அடிப்படையில், அதிகபட்சமாக கரூர் பேரவைத் தொகுதியில் 43 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சென்னை ஆர்.கே.நகரில் 24 மனுக்களும் காங்கேயம் தொகுதியில் 22 மனுக்களும் தாக்கலாகி உள்ளன.

வேட்புமனு தாக்கல் நாளை மார்ச் 19-ம் தேதி மாலை 3 மணியுடன் நிறைவு பெறுகிறது. மறுநாள் சனிக்கிழமை மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெற திங்கள் கிழமை மார்ச் 22 கடைசி நாளாகும்.அன்று மாலை 5 மணிக்கு இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப் படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in