Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

கோவை நவக்கரை அருகே ரயிலில் அடிபட்ட காட்டு யானைக்கு 3-வது நாளாக தொடர் சிகிச்சை

கோவை நவக்கரை அருகே ரயில் மோதியதில் பலத்த காயமடைந்து, உயிருக்குப் போராடி வரும் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் 3-வது நாளாக நேற்று சிகிச்சை அளித்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச் சரகத்துக்கு உட்பட்ட புதுப்பதி ரயில்வே கேட் அருகே கடந்த 15-ம் தேதி அதிகாலை கேரளாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்,எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானை மீது மோதியது.

இதில், 100 மீட்டர் தூரம் யானை இழுத்துச் செல்லப்பட்டதில், அதன் தலை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. யானையால் எழுந்திருக்க முடியாததால், அங்கேயே படுத்துவிட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர், வனக் கால்நடை மருத்துவக் குழுவினர் தண்டவாளத்துக்கு அருகிலேயே யானைக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர், மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி தொடர் சிகிச்சை அளிக்க ஏதுவாக சாடிவயல் கும்கி யானைகள் முகாமுக்கு, அடிபட்ட யானை கொண்டு வரப்பட்டது.

அங்கு கால்நடை மருத்துவர்கள் நேற்று 3-வது நாளாக சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, “யானையின் இடுப்புப் பகுதியில் பலமாக அடிபட்டுள்ளது. முன்னங்கால்கள் அசைகின்றன. பின்னங்கால்களை யானையால் அசைக்க முடியவில்லை. தர்ப்பூசணி பழம், வாழைப்பழத்தை சிறிதளவு யானை உட்கொண்டது. மருந்துகள்அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், யானையின் உடலில் பெரிய முன்னேற்றம் இல்லை" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x