

சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் நகரில் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் பல்வேறு அரசு கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
மேற்கு தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட அன்னை அஞ்சுகம் நகர், அம்பேத்கர் நகர், பெரியார் சமத்துவ நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடுப்பளவுக்கு மழை நீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்மாற்றிகள்(டிரான்ஸ்பார்மர்) மூழ்கும் அளவிற்கு இப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளம் சூழ்ந்த இப்பகுதி யிலுள்ள மக்கள் அருகிலுள்ள 3 அரசு பள்ளிகள், 2 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முடிச்சூர், மன்னிவாக்கம் வழித்தடத்திலும், திருநீர்மலை யிலிருந்து திருமுல்லைவாக்கம் செல்லும் வழித்தடத்திலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடை செய்யப் பட்டுள்ளது.
குரோம்பேட்டை அரசு மருத்துவ மனை, குரோம்பேட்டை காவல் நிலையம், சிட்லபாக்கத்திலுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடங்க ளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.
இப்பகுதியில் பெரும்பாலான சாலைகள் மழையால் சேத மடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த குழிகளை தாம்பரம் நகராட்சி பணியாளர்கள் கான்கிரீட் சிமெண்ட் கலவையைக் கொட்டி தற்காலிகமாக சரி செய்தனர்.