80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கை எதிர்த்த திமுக வழக்கு தள்ளுபடி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும்கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் 80வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் மூலமாக வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான சட்டப்பிரிவுகளை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போதுமூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, “தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறை அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது.

இதுதொடர்பாக எந்தவொரு ஆலோசனையையும் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் முன்கூட்டியே நடத்தவில்லை. தேர்தல் ரகசிய வாக்குப்பதிவை இது பாதிக்கும்” என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், “இந்த வழக்குஊகத்தின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது. தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள தபால் வாக்கு என்பது விருப்பத்தேர்வு மட்டுமே” என்றார்.

அதிகாரம் உள்ளது

மத்திய அரசு தரப்பில் ஆஜரானகூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், “வாக்குச்சாவடிக்கு வர இயலாத, இதுபோன்ற வாக்காளர்களுக்கு தபால்வாக்குக்கு அனுமதி வழங்க தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது” என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in