

ஆலந்தூரில் நடந்த மோதலைத் தொடர்ந்து தேமுதிகவைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ வெங்கட்ராமன், உதவி ஆணையர் செங்கோட்டையன் ஆகியோர் மழையால் சேதமடைந்த குடும்ப அட்டைகளுக்கு நகல்களை வழங்கும் பணியில் நேற்று முந்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலந்தூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நீக்கக்கோரி புகார் மனு கொடுக்க தேமுதிக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.எம்.காமராஜ் அங்கு வந்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இந்த மோதலில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பரங்கிமலை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருதரப்பினரும் போலீஸில் புகார் அளித்தனர். இதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேமுதிகவை சேர்ந்த 162-வது வட்ட செயலாளர் ராஜா, நிர்வாகிகள் நல்லசிவம், வேலாயுதம் ஆகியோரை கைது செய்தனர். இதனால் ஆலந்தூர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
தேமுதிக புகார்
ஆலந்தூர் பகுதி தேமுதிக செயலாளர் பி.கே.நாராயணன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அவருடன் தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் உட்பட ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர்.
விஜயகாந்த் அறிக்கை
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆலந்தூர் கண்ணன் காலனியில் உள்ள 5 தெருக்களில் 15 நாட்களாக தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என்று கோரி மனு அளிப்பதற்காக தேமுதிகவினர் சென்றனர். அவர்கள் மீது அதிமுகவினர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமுற்று மருத்துவமனைக்குச் சென்றவர்களுக்கு அங்கு சிக்கிசை அளிக்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக காவல்துறையினர் குற்றம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடவடிக்கை தேவை
அதிமுகவினர் மற்றும் காவல்துறையின் இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா தவறு செய்த அதிமுக எம்எல்ஏ மீதும், அவருக்கு துணைபுரிந்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.