

வாக்குச்சாவடிகளில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை நிர்ணயம் செய்ய ஆதார் உள்ளிட்ட 11 ஆவணத்தில் ஏதேனும் மாற்றுபுகைப்பட ஆவணத்தை சமர்ப் பித்து வாக்களிக்கலாம்.
இதுதொடர்பாக புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையம், டெல்லி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் தொகுப்பு 61-ன் படி வாக்காளர்கள் வாக்களிக்கும் சமயத்தில், வாக்காளர் அடையாள அட்டைவழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடியில் தங்களின் அடையாளத்தை நிர்ணயம் செய்து வாக்கினை பதிவுசெய்ய புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்த வேண்டும்.
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை நிர்ணயம் செய்ய ஆதார் அட்டை , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டபணி அட்டை, வங்கி அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது) , தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ் போர்ட்), புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம், மத்திய - மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப் படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்றம், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மாற்று புகைப்பட ஆவணத்தை சமர்ப்பித்து, வாக்களிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.