

காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிஷோர் பிரசாத் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிஷோர் பிரசாத் என்பவர் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நல்லதம்பி குறித்து பல்வேறு அவதூறுகளை அவர் பரப்பி வந்தார். இது குறித்த புகார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கவனத்துக்கு சென்றதால், கிஷோர் பிரசாத் என்பவரை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (நேற்று) முதல் விடுவிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
எனவே, காங்கிரஸ் கட்சியின் தோழர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கிஷோர் பிரசாத் துடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.