

ஆற்று மணல் அள்ளுவது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜி பேசியது விவாதப் பொருளாகியுள்ள நிலையில், அவருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.
எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர். அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டவுடன் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள இருக்கும் தடைகள் அகலும். இதைத் தடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்று பொருள்படும் வகையில் பேசியிருந்தார்.
அவருடைய இந்தப் பேச்சுக்கு திமுகவினர் வரவேற்பு தெரிவித்தாலும், மற்ற கட்சியினர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்நிலையில் கமல் ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் திமுக, மநீம தொண்டர்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.