

‘‘தேர்தல் முடிவுக்குப் பிறகே கூட்டணி அமைச்சரவை குறித்து முடிவு செய்யப்படும்,’’ என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
அவர் காரைக்குடியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு ரூ.6.10 லட்சம் கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மோடி தான் தமிழகத்திற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம், 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரை எய்ம்ஸ், ரூ.1.03 லட்சம் கோடியில் சாலை வசதிகள், மெட்ரோ ரயில், ராணுவ உபகரணங்கள் தயாரிக்கும் வழித்தட தொழிற்சாலை போன்றவற்றை கொடுத்தார்.
தமிழக மக்களுக்கு திமுக, காங்கிரஸ் தான் எதிரி. அவர்கள் ஆட்சியில் ஜல்லிக்கட்டை தடை செய்தனர். ஜல்லிக்கட்டு கலாச்சார விளையாட்டு என்பதால் பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சீன அதிபரை மகாபலிபுரத்திற்கு அழைத்து வந்தது பிரபலபடுத்தியவர் மோடி. அவர் தான் தமிழகத்திற்கு உண்மையான நண்பர்.
தமிழகம் ஒரு தனி குடும்பத்திற்கு சொந்தமானது கிடையாது. தமிழகம் மக்களுக்கு சொந்தமானது. காரைக்குடியில் ஹெச்.ராஜா வெற்றி பெறுவார். அதிமுக, பாஜக கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணி, அமைச்சரவை குறித்து முடிவு செய்யப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்ததால் நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்குப் பாதிப்பு இருக்காது. எங்களது கூட்டணி ஆட்சி வந்தால் கட்டப் பஞ்சாயத்து செய்ய மாட்டோம். நிலத்தை அபகரிக்க மாட்டோம்.
வருமான வரித்துறைக்கு அதிமுக, பாஜக, திமுக என்ற கட்சி பாகுபாடு கிடையாது. கருப்புப் பணம் உள்ளவர்கள் வீட்டில் சோதனை செய்யும். பாஜகவிடம் பணமே இல்லை. அப்புறம் எப்படி கருப்புப் பணம் இருக்கும். அதிமுக வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் இருந்தது இல்லை.
பொங்கலுக்கு ரூ.2,500 சொன்னார்கள், பயிர்க்கடன் தள்ளுபடி என்றார்கள் செய்தார்கள். அதேபோன்று 6 சமையல் எரிவாயு சிலிண்டர்களும் வழங்குவார்கள். என்று கூறினார்.
மேலும், மதுரையில் பாஜகவில் சேர்ந்த சரவணனுக்கு சில மணி நேரங்களிலேயே சீட் வழங்கியது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, ‘அதுதான் அரசியல், என்று பதிலளித்தார். உடன் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா இருந்தார்.