

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எங்கள் மீது எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகின்றனர் என்று பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று (புதன்கிழமை) வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எங்கள் மீது எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகின்றனர். அவர்களுக்கு நான் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். நீங்கள் எங்கள் மீது உபயோகிக்கும் ஆயுதங்களை உங்கள் மீது ஏவுவேன். இதுபற்றி யாராவது இனி பேசினால் நானும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பொள்ளாச்சி பெண்களிடம் தவறான பொய்ப் பிரச்சாரத்தை முன்வைத்து திமுக ஓட்டு வாங்க நினைக்கிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.