

திருமங்கலம் அருகே சமத்துவபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திடீரென்று அங்குள்ள டீ கடைக்குள் நுழைந்து டீ மாஸ்டராகவே மாறி, பிரச்சாரத்துக்கு உடன் வந்தவர்கள், பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்தவாறே வாக்குகளை சேகரித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் போட்டியிடுகிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டாக ‘பூத்’ வாரியாக நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளை செய்து வருகிறார். சமீபத்தில் திருமங்கலம் தொகுதியில் ஜெயலலிதாவுக்காக கோயில் கட்டி திறந்த ஆர்பி.உதயகுமார், அந்தக் கோயிலைதான் தன்னுடைய தேர்தல் பணிகளின் தலைமையகமாக கொண்டுள்ளார்.
காலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு கோயிலிருந்துதான் பிரச்சாரத்திற்கு புறப்படுகிறார். சாதாரணமாக தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் உள்ளூர் கோயில் திருவிழாக்கள், பண்டிகை நாட்கள், வீட்டு விஷேசங்களுக்கு நேரடியாகச் சென்று அந்தந்த பகுதி மக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்குவார்.
தற்போது தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டதால் திருமங்கலம் தொகுதியில் ‘திருமங்கலம் பார்முலா’வை அதிமுகவினர் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது மதுரையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கிராமங்கள் தோறும் சென்று காலை முதல் இரவு வரை ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இன்று திருமங்கலம் அருகே கரிசல்பட்டி, காமாட்சிபுரம், சமத்துவபுரம், மீனாட்சிபுரம், ராயபாளையம், ஆலம்பட்டி, இடையபட்டி, நாகையாபுரம் ,மதிப்பனூர், திரளி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார்.
திருமங்கலம் சமத்துவப்புரத்தில் வாக்கு சேகரித்தபோது அங்குள்ள ஒரு டீ கடையில் ஏராளமானோர் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த அமைச்சர் ஆர்பி.உதயகுமார் ஜீப்பில் இருந்து கீழே இறங்கி அந்த டீ கடைக்குள் சென்றார். அமைச்சர் டீ குடிக்கப்போகிறார் என்று கட்சியினர் நினைத்தனர்.
ஆனால், அமைச்சரோ, அந்தக் கடையில் நின்ற டீ மாஸ்டரை சற்று நேரம் பணியை நிறுத்திவிட்டு ஓரமாக நிற்கச் சொன்னார். பின்னர், அமைச்சரே டீ போட ஆரம்பித்தார்.
டீ போட்டு, அங்கு பிரச்சாரத்தை பார்க்க வந்த பொதுமக்கள், உடன் வந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவருக்காக கொடுத்தார். அமைச்சர் போட்டுக் கொடுத்த டீ அருமையாக இருப்பதாக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கூறினர்.
அமைச்சரின் இந்த ‘டீ’ மாஸ்டர் பிரச்சாரம் அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.