

முதுகுளத்தூரில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் வேட்புமனுதாக்கல் செய்தபின் உட்கட்சி பூசலால் திமுகவினர் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் இருவருக்கு மண்டை உடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜ கண்ணப்பன் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன்பின்னர் அவர் திறந்த ஜீப்பில் ஊர்வலகமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது முதுகுளத்தூர்- தேரிருவேலி செல்லும் சாலையில் திமுகவினரின் உட்கட்சிப் பூசலால் முதுகுளத்தூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தரப்பிற்கும், முன்னாள் ஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கத்தின் மகனும், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஹரி தரப்பிற்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.
அப்போது 2 தரப்பினரும் கற்கள், கட்டையால் வீசி தாக்கிக் கொண்டனர். இதில் சண்முகம் தரப்பை சேர்ந்த பாலமுருகன், முத்துக்குமார் ஆகிய 2 பேருக்கு மண்டை உடைந்தது.
இதையடுத்து காயம்பட்ட 2 பேரும் சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடந்த 13-ம் தேதி திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை பார்த்திபனூரில் வரவேற்பு அளிக்கச் சென்றபோது மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஹரி தரப்பினரும், சண்முகம் தரப்பினரும் காரில் முன்பின் செல்வதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் காவல் சார்பு ஆய்வாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.