Published : 17 Mar 2021 06:35 PM
Last Updated : 17 Mar 2021 06:35 PM

வாடகைக்கு வாங்கி பொய் பேசுகிறார் ஸ்டாலின்; அந்தத் திறமை கூட இல்லை: முதல்வர் பழனிசாமி தாக்கு

முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்.

பாபநாசம்

நான் எப்படி முதல்வராக வந்தேன் என்பதை நீங்கள் சொல்லி நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என, முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 17) தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது:

"திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களில் பேசி வருகிறார். 'அதிமுகவை இந்தத் தேர்தலோடு விரட்டி அடிப்பேன்' என்று. ஸ்டாலின் இந்த பாபநாசம் வந்து பாருங்கள், இந்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டுப் பின்பு பேசுங்கள்.

நான் எப்படி முதல்வராக வந்தேன் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அதை நீங்கள் சொல்லி நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவின் அருளாசியோடும், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுமக்களின் ஆதரவோடு நான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஒரு விவசாயி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏன், விவசாயி முதல்வராக இருக்கக் கூடாதா? ஒரு விவசாயி முதல்வராக இருக்கின்ற காரணத்தினால் தான், விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்டாலினுடைய அப்பா கருணாநிதி எத்தனை முறை முதல்வராக இருந்தார். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு என்ன நன்மைகளைச் செய்தார். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதியும், திமுகவும் துரோகம்தான் செய்தனர். ஆனால், நான் விவசாயி என்ற காரணத்தினாலே டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தேன். கருணாநிதி முதல்வராக இருந்தபோது கர்நாடக அரசின் கபினி அணை பணிகளுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தார்.

விவசாயிகள் வறட்சி, புயல்கள், தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டார்கள். அப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாயை ஜெயலலிதா அரசு ரத்து செய்து, அதற்கான ரசீது வழங்கிய பிறகும், திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மக்களை ஏமாற்றுகின்ற வேலை. எவ்வாறு நீங்கள் தள்ளுபடி செய்வீர்கள். எப்படியாவது மக்களைக் குழப்பி வெற்றி பெற வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.

நீட் தேர்வு கொண்டு வந்தது அப்போழுது திமுக அங்கம் வகித்த மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி. 2010 காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில்தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தது. அப்பொழுது அதைத் தட்டிக் கேட்க முடியவில்லை. அதைத் தடுத்து நிறுத்த திராணி இல்லை. இப்பொழுது நம் மீது பழி போடுகிறார்கள்.

ஜெயலலிதா இருக்கின்றபோது சட்டப் போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தினார்கள். நீதிமன்ற உத்தரவினால் அதை அமல்படுத்துகின்ற நிலை. அதிமுகவைப் பொறுத்தவரையில் நீட்டை எதிர்த்தோம், அதை ஒருபோதும் ஆதரித்தது கிடையாது என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. இதனால், அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தோம்.

ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் பெட்டி வைத்து மனு வாங்குகிறார். அந்த மனுக்களுக்கு, தான் முதல்வராக பதவியேற்றதும் 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதாக தொடர்ந்து பொய் பேசி வருகிறார். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு பொருத்தமாக பொய் சொன்னால், மெய் திரு திருவென முழிக்கும் என்று, அதுபோல ஸ்டாலின் பொருத்தமாகப் பொய் பேசி வருகிறார்.

10 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விடவேண்டும் என்பதற்காக மக்களைக் குழப்ப பொய்யாகப் பேசி வருகிறார். அதையும் வாடகைக்கு வாங்கித்தான் பேசி வருகிறார். பொய் கூட சொந்தமாகப் பேசத் தெரியவில்லை. பொய் பேசுவதைக் கூட சரியாகப் பேசினால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அந்தத் திறமை கூட இல்லாத தலைவர்தான் திமுக தலைவர் ஸ்டாலின். மக்களிடம் உண்மையைப் பேசுங்கள், அப்போதாவது எதிர்க்கட்சி வரிசையாவது கிடைக்கும். தொடர்ந்து பொய் பேசி வந்தால் அது கூட கிடைக்காது".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x