

பொதுமக்களின் குறைந்தபட்ச வருமானத்தை அதிகரிக்கச்செய்யும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்சாலைகளைக் கொண்டுவருவோம் என வாக்குறுதி அளித்தார் விருதுநகர் தொகுதி அமமுக வேட்பாளர் கோகுலம் தங்கராஜ்.
அதிமுகவில் எம்ஜிஆர். மன்றச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்த கோகுலம் தங்கராஜ், விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்புக் கொடுக்கப்படாததால் கடந்த வாரம் அமமுகவில் இணைந்தார்.
அதையடுத்து, அவருக்கு அக்கட்சி சார்பில் விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமமுக வேட்பாளர் கோகுலம் தங்கராஜ் தனது ஆதரவாளர்களுடன் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அதன்பின் அவர் அளித்த பேட்டியில், கரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
அதிமுக என்னை வளர்த்தது. ஆட்கள் நிறைய உள்ளதால் அதிமுகவில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், எனது சேவையை அறிந்துகொண்டு அமமுகவில் எனக்கு போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளனர்.
தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற என்னை வாக்காளர்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும். வெளியூரில் சம்பாதித்தாலும் பிறந்த ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு போட்டியிடுகிறேன். வெற்றிபெற்றதும் இப்பகுதி மக்களின் குறைந்த பட்ச வருமானத்தை உயர்த்த வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகளைக் கொண்டுவருவோம் என்றார்.