

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் தீவிரமடைந்த நிலையில், கட்சிக்கு ஆள் சேர்க்கும் படலமும், பலர் கட்சி மாறும் காட்சிகளும் தீவிரமாக நடந்தேறின. முக்கியக் கட்சிகள் தாமதமாக வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க இதுவே காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, மாநிலங்களவை உறுப்பினரும், தேர்தல் இணை பொறுப்பாளருமான ராஜிவ் சந்திரசேகர், அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம் ஆகியோர் நேற்று பிற்பகல் புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு ஹெலிகாப்டர் மூலம் திடீரென வந்தனர்.
தொடர்ந்து தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் மகன் வி.எம்.சி.எஸ்.மனோகரன் பாஜக தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
காரைக்கால் மாவட்டம் நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்காக வி.எம்.சி.எஸ்.மனோகரன் கடந்த 15-ம் தேதி இரவு ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் பாஜக சார்பில் அத்தொகுதியில் போட்டியிட சரியான நபர் அமையாத நிலையில், மனோகரனைக் கட்சியில் சேர்க்க உடனடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று பிற்பகலில் கட்சியில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து நேற்று இரவு வெளியிடப்பட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் வி.எம்.சி.எஸ்.மனோகரன் நிரவி - திருப்பட்டினம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
அத்தொகுதியின் தற்போதைய திமுக எம்எல்ஏ கீதா ஆனந்தனுக்கு மீண்டும் அக்கட்சியில் வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியில் உள்ள அவர் அண்மையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமியைச் சந்தித்தார்.
இந்நிலையில் அவரை பாஜகவில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு , அவர் மறுத்த நிலையில், அதன் பின்னரே வி.எம்.சி.எஸ். மனோகரனைச் சேர்ப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் என்பவர் திருநள்ளாறு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.