

அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். தடுப்பூசியைத் தவறாமல் போட்டுக் கொள்ளுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்தார்.
தமிழகத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி 400 என்கிற அளவில் இருந்த கரோனா தொற்று தற்போது 1000 என்கிற அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தேர்தல் நேரம் அரசியல் கூட்டங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டாலின் இதே வேண்டுகோளை பொதுமக்களிடம் வைத்தார்.
அவர் பேசியதாவது:
“கரோனா தமிழ்நாட்டுக்குள் நுழைந்த நேரத்தில், அம்மா ஆட்சியில் கரோனா வராது என்று முதல்வர் பழனிசாமி சொன்னார். அதனால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு, எவ்வளவு பேர் இறந்துள்ளனர். ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் 5,000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னேன். நிதி இல்லை என்று சொன்னார்கள்.
கொள்ளையடிப்பதற்கு அந்த நிதியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கரோனாவைப் பயன்படுத்திக் கொள்ளை அடித்தவர்கள் இவர்கள். முகக் கவசத்தில் கொள்ளை, ப்ளீச்சிங் பவுடரில் கொள்ளை, துடைப்பத்தில் கொள்ளை. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக ஆட்சி வெறும் 1000 ரூபாய் மட்டும் அறிவித்தது.
நாம் இந்தத் தேர்தல் அறிக்கையில் மீதமிருக்கும் 4,000 ரூபாயை திமுக ஆட்சிக்கு வந்ததும் அத்தனை குடும்பங்களுக்கும் வழங்குவோம் என்று அறிவித்துள்ளோம். திமுக ஆட்சியில் வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட் போடப்படும். மாணவர்கள் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு குறைவான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இப்போது கரோனா அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இனிமேல் தயவுசெய்து யாரும் முகக்கவசம் போடாமல் இருக்காதீர்கள். தடுப்பூசியும் தயவுசெய்து போட்டுக்கொள்ளுங்கள். நானும் போட்டுக்கொண்டேன். நாம் நன்றாக இருந்தால்தான் நாட்டுக்குப் பணியாற்ற முடியும். எனவே, தயவுசெய்து யார் யார் தடுப்பூசி போடவில்லையோ உடனடியாகத் தடுப்பூசி போடுகிற முயற்சியில் ஈடுபட வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.