Last Updated : 17 Mar, 2021 02:41 PM

 

Published : 17 Mar 2021 02:41 PM
Last Updated : 17 Mar 2021 02:41 PM

தேர்தலுக்கு முன்பாகவே விவசாயிகளுடைய கடன்களைத் தள்ளுபடி செய்தது அதிமுக அரசு: முதல்வர் பழனிசாமி பேச்சு

தேர்தலுக்கு முன்பாகவே விவசாயிகளுடைய கடன்களைத் தள்ளுபடி செய்தது அதிமுக அரசு என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே திருவையாற்றில் இன்று (மார்ச் 17) பாஜக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"திருவையாறு பகுதியில் விவசாயிகளின் நலனுக்காக கல்லணை கால்வாய் 290 கோடி ரூபாயில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. டெல்டா விவசாயிகள் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் தங்களுடைய நிலங்கள் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். ஆனால், அந்த அச்சத்தைப் போக்கும் விதமாக, இந்தப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எனது தலைமையிலான அரசு அறிவித்து விவசாயிகளின் அச்சத்தைப் போக்கியுள்ளோம்.

விவசாயிகள் வழியில் வந்த ஒருவருக்குத்தான் விவசாயிகளுடைய சிரமங்கள் வேதனைகள் தெரியும். எனவேதான், இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டு காலமாக போதிய தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு கர்நாடகாவிடம் போராடித் தண்ணீரைப் பெற்று விவசாயம் செய்து வந்தோம். இதற்கு சட்டப் போராட்டங்களை நடத்தி ஜெயலலிதாவின் எண்ணத்தை எனது தலைமையிலான அரசு தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளது.

காவிரி - கோதாவரி திட்டம் விரைவில் வெற்றி பெறும். விவசாயிகள் எந்த ஒரு திட்டத்தைத் தொடங்கினாலும் வெற்றி பெறும். அதுபோல, இந்தத் திட்டத்துக்கு விவசாயி ஆகிய நான் அருகில் உள்ள ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களைத் தொடர்பு கொண்டு இந்தத் திட்டத்துக்கு உரிய தண்ணீரைக் கேட்டு, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.80 ஆயிரம் கோடி செலவாகும் என பிரதமரிடம் எடுத்துக் கூறி அதற்கான நிதியையும் தருகிறேன் என உறுதிமொழி அளித்துள்ளார். தமிழகத்தில் நீர் மேலாண்மையைக் கொண்டு வருவதே எனது லட்சியம்.

இந்தப் பகுதியில் திருவையாறு திருக்காட்டுப் பள்ளிக்கு புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில்தான் சில திட்டங்களைச் சொல்வார்கள். ஆனால், தேர்தலுக்கு முன்பாகவே விவசாயிகளுடைய கடன்களைத் தள்ளுபடி செய்து அதற்குச் சான்றிதழும் வழங்கியுள்ளோம்.

இந்தத் தொகுதியில் ஏழை மாணவர்களும் கல்வி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லூரியும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை திமுக ஆட்சியில் கொண்டு வந்தார்களா என்பதை இங்குள்ளவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் 41 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். நானும் அரசுப் பள்ளியில் படித்தவன் என்பதால் அரசுப் பள்ளி மாணவர்களின் சிரமங்களை நன்கறிவேன். கடந்த ஆண்டு 6 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால், தற்போது 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, 435 மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றனர். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் இந்த அரசு கட்டியுள்ளது .

வீடு இல்லாத நிலையை அனைவருக்கும் உருவாக்க வேண்டும் என்பதால் ஏழை, எளியோர் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்.

தற்போது கரோனா காலம் என்பதால் கொஞ்சம் அதிகமாகப் பரவி வருகிறது. எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x