தொகுதியை மாற்றியதற்கு கண்ணீர் விட்ட புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர்: உடன் அழுத நிர்வாகிகள்

கண்ணீர்விட்ட ஓம்சக்தி சேகர்.
கண்ணீர்விட்ட ஓம்சக்தி சேகர்.
Updated on
1 min read

தனக்கு எதிராக சதி நடக்கிறது என குறிப்பிட்டு, சொந்த தொகுதியை மாற்றி வேறு தொகுதியில் போட்டியிட கட்சித்தலைமை தெரிவித்துள்ளதை தெரிவித்து, அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கண்ணீர் விட்டதை பார்த்து நிர்வாகிகளும் அழுதனர்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டு வென்ற நெல்லித்தோப்பு தொகுதியில் இம்முறை காங்கிரஸ் கூட்டணியில் திமுக போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தரப்பில் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் போட்டியிட நெல்லித்தோப்பில் மனுத்தாக்கல் செய்தார்.

அதேபோல், அக்கூட்டணியிலுள்ள பாஜக தரப்பில் ஜான்குமாரின் மகன் ரிச்சர்ட்ஸ் மனுதாக்கல் செய்தார். இதில் இழுபறி நீடித்தது. தொகுதி பங்கீட்டில் நெல்லித்தோப்பு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதனால் ஓம்சக்தி சேகருக்கு உருளையன்பேட்டை தொகுதி நேற்று (மார்ச் 16) இரவு தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், லெனின் வீதியில் உள்ள அதிமுக மேற்கு மாநில அலுவலகத்தில் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 17) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேற்கு மாநிலத்திலுள்ள 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.
கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.

இக்கூட்டத்தில் ஓம்சக்தி சேகர் பேசுகையில், "நெல்லித்தோப்பு தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளேன். உண்மைக்கு கிடைத்த விலை என்ன என்பதை நான் தெரிந்து கொண்டேன். கட்சி தலைமையின் ஆணையை ஏற்று உருளையன்பேட்டை தொகுதியில் நின்று வெற்றி பெறுவேன். நெல்லித்தோப்பு தொகுதியில் இருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற எனக்கு மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. எனக்கு எதிராக சதி நடக்கிறது. கட்சியிலிருந்து அகற்றவே தொகுதி மாறி போட்டியிட வைத்துள்ளனர்.

அதே நேரத்தில், நெல்லித்தோப்பில் எனக்காக உழைத்தவர்களை விட்டு செல்வது கஷ்டமாக உள்ளது" எனக்கூறிய அவர் திடீரென்று அழுதார். இதை பார்த்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கூடவே அழுதனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in