குருட்டு அதிர்ஷ்டத்தால் முதல்வரான பழனிசாமி தேமுதிகவை விமர்சிப்பதா? -டிடிவி தினகரன் கேள்வி

குருட்டு அதிர்ஷ்டத்தால் முதல்வரான பழனிசாமி தேமுதிகவை விமர்சிப்பதா? -டிடிவி தினகரன் கேள்வி
Updated on
2 min read

மக்களை ஏமாற்றும் வெற்று வாக்குறுதிகளை திமுகவும், அதிமுகவும் கொடுத்துள்ளன. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக, அதிமுக கட்சிகள் அறிவித்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். 7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனை வைத்துக்கொண்டு வெற்றிநடை போடுகிறது என்றால் மக்கள் காதில் பூ சுற்றும் செயல் அல்லவா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.

சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தபின் எல்.கே.சுதீஷுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

அப்போது அவர் பேசியதாவது:

“வெற்றிக் கூட்டணியாக அமமுக, விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, எஸ்டிபிஐ, ஒவைசி கட்சியுடன் இணைந்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தையும், அவரது துணைவியார் பிரேமலதாவையும், சுதீஷையும் சந்தித்தேன். எங்களுடைய கொள்கை தீய சக்தியான திமுக வரக்கூடாது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. தமிழ்நாட்டில் நல்லதொரு ஆட்சியை, ஊழலற்ற ஆட்சியை, தமிழக மக்களுக்கு நன்மை தரக்கூடிய ஆட்சியை அமைக்க இக்கூட்டணி உறுதியெடுத்துள்ளது.

துரோகக் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். நாங்கள் கூட்டணி குறித்து தொடர்ந்து 10 நாட்களாகப் பேசிக் கொண்டிருந்தோம். 60 தொகுதிகள் பேசி இறுதி செய்வது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தெரியும். நாங்கள் தேமுதிகவைத் தேடிப் போனோமா, நாங்கள்தான் முதலில் தேடிப்போய் பேசினோமா என்பதெல்லாம் கேள்வி அல்ல. இரண்டு துரோகக் கட்சிகள் வீழ்த்தப்பட வேண்டும் என்கிற கருத்துள்ள இரண்டு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளோம்.

மக்களை ஏமாற்றும் வெற்று வாக்குறுதிகளை திமுகவும், அதிமுகவும் கொடுத்துள்ளன என்று மக்களுக்கே தெரியும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக, அதிமுக கட்சிகள் அறிவித்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். 7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனை வைத்துக்கொண்டு வெற்றிநடை போடுகிறது என்றால் மக்கள் காதில் பூ சுற்றும் செயல் அல்லவா?

தேமுதிக கூட்டணிக்குள் வந்ததால், 42 தொகுதிகளில் எங்கள் தொண்டர்கள் அவர்களாகவே விட்டுக் கொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட ராணுவக் கட்டுப்பாடு உள்ள கட்சி இது. நீங்கள் நினைப்பதுபோல் எங்கள் இயக்கம் டெல்டாவில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ளது. தலைமை மட்டும் பேசி உருவான கூட்டணி அல்ல. தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்பிப் பேசி இணைந்த கூட்டணி இது.

தேமுதிகவைப் பக்குவமில்லாத கட்சி என்கிறார் முதல்வர் பழனிசாமி. இவர் நிரம்பப் பக்குவமானவரா? இவரே குருட்டு அதிர்ஷ்டத்தில் வந்தவர்தானே. விஜயகாந்த், தானே ஒரு கட்சியைச் சுயமாக உருவாக்கியவர். இவருக்கு அவர்களை விமர்சிக்க என்ன அருகதை உள்ளது?

கரோனா நோய்த்தொற்று அதிகரிக்கிறது என அரசு முடிவெடுத்தால் அதற்குக் கட்டுப்படவேண்டியது என் பொறுப்பு. அதிமுகவுக்கு வரவேண்டும் என சி.டி.ரவி அவரது விருப்பத்தைச் சொன்னார். எனக்கு நன்கு தெரிந்தவர் என்பதால் அவர் அப்படிச் சொல்லியிருப்பார். அதற்காக நான் பதில் சொல்ல முடியாது”.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in