வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை சாத்தியமே: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்ற திட்டம் சாத்தியமானதுதான் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

திமுக வாக்குறுதிகளை அதிமுக அப்படியே பிரதியெடுத்துவிட்டதாக விமர்சனம் உள்ளதே?

நாங்கள் செய்த திட்டங்களைத்தான் எங்கள் கட்சி பிரதிபலித்திருக்கிறது.

குலவிளக்கு திட்டம், கல்விக் கடன் தள்ளுபடி போன்றவற்றை திமுக முன்கூட்டியே சொல்லிவிட்டதே?

நாங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.2,500 கொடுத்ததை மனதில் வைத்துக்கொண்டுதான் திமுக அதைச் சொன்னது. அப்போது யார், யாரைப் பார்த்துச் சொல்கிறார்கள்? திமுக எங்களைப் பார்த்து பயப்படுகிறது. மக்களுக்குச் செய்வோம் என்கிற அடிப்படையில்தான் வாக்குறுதிகள் அளித்திருக்கிறோம்.

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்பதை நிறைவேற்ற முடியுமா? வறுமைக்கோட்டுக்குக் கீழ் எடுத்தால் கூட 60 லட்சம் குடும்பங்கள் உள்ளன. அவ்வளவு அரசு வேலையைக் கொண்டு வர முடியுமா? மொத்த வருவாயும் அவர்களுக்கு வருமானம் அளிப்பதிலேயே போய்விடாதா?

சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து சொல்லியிருக்கிறோம். திமுக போன்று போகிற போக்கில் சொல்லவில்லை. 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாகச் சொன்னார்கள். அப்படி எல்லோருக்கும் கொடுத்துவிட்டார்களா? தாலிக்குத் தங்கம் திட்டம் எப்படி நடக்கும் எனக் கேள்வி கேட்டனர். இதுவரை ஆறரை டன் தங்கம் கொடுத்திருக்கிறோம். இதுவரை 12.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சாத்தியக்கூறு இருந்ததால்தான் கொடுத்தோம். எல்லோரும் அரசுக்குக் கடன் இருக்கிறது என்கின்றனர். திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி கடன் இருந்தது. வாங்கும் திறன் இருப்பதால்தான் கடன் வாங்கப்படுகிறது.

அரசு வேலை திட்டத்துக்கு ரூ.3 லட்சம் கோடி செலவாகும் எனக் கணிக்கப்படுகிறதே?

நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆரம்பத்தில் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால், இந்தத் திட்டம் சாத்தியமானதுதான். காலத்தின் அவசியம்தான் மனிதனைச் சிந்திக்க வைக்கிறது. வருமானம், வாய்ப்புகள் இருக்கின்றன. சாத்தியப்படாததை நாங்கள் சொல்லமாட்டோம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in