

திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் எனக்குச் சவால் இல்லை. அவர் வானத்திலிருந்து குதித்துவிட்டாரா என்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி போட்டியிடுகிறார்.
அவரிடம் திமுக சார்பாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கஸ்ஸாலி பதிலளிக்கும்போது, “உதயநிதி ஸ்டாலின் எனக்குச் சவால் இல்லை. அவர் வானத்திலிருந்து குதித்துவிட்டாரா? போனமுறை தனித்து நிற்கும்போது பாமக சார்பாக சேப்பாக்கத்தில் நான்தான் போட்டியிட்டேன். சேப்பாக்கம் தொகுதியில் நான் சென்றதுபோல் எந்த வேட்பாளரும் சென்றிருக்க மாட்டார்கள்.
மக்களை நேரடியாகச் சந்தித்தேன். அவ்வாறு சென்றபின்தான் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிந்தது. நான் மக்களை நம்பி இருக்கிறேன். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மக்களின் குரலாக என்னை ஏற்றுக் கொள்கிறார்கள்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என்பது இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதி. அதுமட்டுமல்லாமல் அனைத்துச் சமூகத்தினரும் இங்கு உள்ளனர். சென்னையில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் என்னைத்தான் பிரதிநிதியாகக் கருதுகிறார்கள்'' என்று கஸ்ஸாலி தெரிவித்தார்.